இரண்டு ஆண்டுகள் நடந்த எந்திரன் படப்பிடிப்பு நிறைவு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்டம் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கியுள்ள மிகப்பிரமாண்டமான படம் 'எந்திரன்'. பெரும் பொருட்செலவில் இதுவரை இந்தியப்பட உலகில் யாரும் உருவாக்காத அளவுக்கு, படவுலகமே  வியப்பின் உச்சிக்கே செல்லும் அளவுக்கு,  மிகப்பிரமாண்டத்துடன்  உருவாக்கப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு, 2 ஆண்டுகளாக இடைவிடாமல் நடந்து, கடந்த 7&ம் தேதி நிறைவடைந்தது. 'எந்திரன்' படம் எப்போது வெளிவரும் என்று நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற நிலையில், இப்போது  அந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.
இரவு பகல் பாராத இரண்டாண்டு உழைப்பு
இரவு, பகல் பாராமல் உழைத்த அத்தனை பேரும், பிரமாண்ட படப்பிடிப்பு முடிந்த அன்று இரவு பிரமாண்டமான கேக் வெட்டி கொண்டாடினர். இதில், ரஜினிகாந்த், ஷங்கர், ஐஸ்வர்யா ராய் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து நட்சத்திரங்கள், இயக்குனர், மற்றும் படப்பிடிப்பு குழுவினருக்கு சன் பிக்சர்ஸ் அதிபரும் சன் நெட்வொர்க் தலைவருமான கலாநிதி மாறன் சிறப்பு விருந்து அளித்தார்.
மகிழ்ச்சியை பகிர்ந்த சூப்பர் ஸ்டார்
சிறப்பு விருந்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் கலந்துகொண்டனர். படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக, கலாநிதி மாறனிடம் அவர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். 'எந்திரன் திரைப்படம் இந்திய திரையுலக வரலாற்றில் மாபெரும் வெற்றிப்படமாக அமையும்' என்று அப்போது மிகுந்த பெருமிதத்துடன்  ரஜினிகாந்த்  கூறினார்.
'நவீன தொழில்நுட்பத்திலும் பிரமாண்டத்திலும் 'எந்திரன்' ஹாலிவுட்டுக்கே புதுமையான படமாக இருக்கும். ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் அதிசயிக்கும் படி அமைக்கப்பட்டிருக்கிறது' என்று இயக்குனர் ஷங்கர் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.
மலேசியாவில் 31ம் தேதி : பாடல் வெளியீடு!
'எந்திரன்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வரும் 31&ம் தேதி நடக்கிறது. கேட்பவர்களை மயக்கும் விதத்தில் ஒவ்வொரு பாடலையும் வித்தியாசமாக உருவாக்கியுள்ளார் ஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். பிரமாண்டமாக நடக்க இருக்கும் இந்த விழாவில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இந்தியாவில் உள்ள பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள். உலகின் மிகச்சிறந்த கலைக்குழுக்கள் இதில் பல நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றன.

Comments

Most Recent