விஜய் மீது நடவடிக்கை கூடாது-சரத்குமார்

http://thatstamil.oneindia.in/img/2010/07/15-radhika-sarath-kumar1-200.jpg
இலங்கைக்குப் படப்பிடிப்புக்குப் போயுள்ள நடிகை ஆசின் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. அதை நடிகர் சங்கம் ஏற்காது என்று நடிகர் சங்கத் தலைவர் சரத் குமார் கூறியுள்ளார்.

நடிகை ஆசின் இலங்கையில் படப்பிடிப்புக்காக போயிருப்பதாலும், ராஜபக்சே மனைவி ஷிராந்தியுடன் சேர்ந்து டூர் சென்று கொண்டிருப்பதாலும் அவர் மீது திரையுலகம் கோபத்தில் இருப்பதாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை பாயும் எனவும் பரவலாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் வழக்கம்போல இந்த விவகாரத்தையும் நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டன. நடிகர் சங்கத் தலைவரான சரத்குமார், ஆசின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூறி விட்டார்.

அதேபோல தொடர் தோல்விகளால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ள தங்ககளுக்கு இழப்பீடு தரும் வரை நடிகர் விஜய் படத்தை புறக்கணிக்கப் போவதாக கூறியுள்ள தியேட்டர் உரிமையாளர்கங்கள் சங்கத்திற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனைவி ராதிகாவுடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து விட்டு வந்த பின்னர் இந்த இரு முக்கிய கருத்துக்களையும் அவர் வெளியிட்டிருப்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

இதுகுறித்து நடிகர் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில்,

ஆசின் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றிருப்பது, ஒரு பிரச்சினை ஆகியிருக்கிறது. அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருக்கு தொழில் ரீதியாக தடை விதிக்க வேண்டும் என்றும் பேசுகிறார்கள். அது தவறு.

படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை தேர்வு செய்வது, நடிகர்-நடிகைகள் அல்ல. அது தயாரிப்பாளர்-டைரக்டரின் வேலை. அவர்கள் எந்த இடத்தை தேர்வு செய்கிறார்களோ, அங்கு போய் நடிப்பதுதான் நடிகர்-நடிகைகளின் வேலை. அசின், அவர் வேலையை பார்ப்பதற்காக இலங்கை சென்று இருக்கிறார். இதில், அவர் எந்த குற்றமும் செய்யவில்லை.

சமீபத்தில் இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றபோது, அந்த விழாவில் நடிகர்-நடிகைகள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு தடை விதித்தது. அதை ஏற்றுக்கொண்டு தமிழ் நடிகர்-நடிகைகள் அந்த விழாவை புறக்கணித்தனர். அந்த தடை, அந்த விழாவோடு போய்விட்டது.

அதன்பிறகும் யாரும் இலங்கை செல்லக்கூடாது என்று தடை விதிப்பது முறையல்ல. இலங்கைக்கு கிரிக்கெட் வீரர்கள் சென்று இருக்கிறார்கள். சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள சில கம்ப்யூட்டர் நிறுவனங்கள், இலங்கையுடன் வர்த்தகம் வைத்துக்கொள்கின்றன. அப்படியிருக்கும் போது, ஒரு நடிகை படப்பிடிப்புக்காக இலங்கை சென்றது எப்படி தவறாகும்?

நடிகர்-நடிகைகளுக்கு யாரும் தொழில் ரீதியாக தடை விதிக்கக்கூடாது. ஆசின் மீது தடை விதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வோம்.

இலங்கையில் பல தமிழர்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். உதவி கேட்டு அவர்களிடம் இருந்து எனக்கு நிறைய கடிதங்கள் வந்துள்ளன. அந்த கடிதங்களை நடிகர் சங்க செயற்குழுவில் வைத்து விவாதித்து, நடிகர்-நடிகைகளை கொண்ட ஒரு குழு யாழ்ப்பாணம் செல்வது பற்றி முடிவு செய்யப்படும்.

தியேட்டர் அதிபர்கள் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று நடிகர் விஜய்யிடம் கேட்பது நியாயம் அல்ல. ஒரு படத்தில் நடித்து முடிப்பதுடன் நடிகரின் பங்கு முடிந்து விடுகிறது. படத்தில் லாபம் வரும்போது அதில் லாபம் வந்தது என்று சொல்லி நடிகர்களுக்கு யாரும் தருவதில்லை. அதேபோல், நஷ்டம் வரும் போதும் நடிகர்களிடம் கேட்கக்கூடாது என்றார் சரத்குமார்.

Comments

Most Recent