மற்றவர்களை விட எனக்கு ஒரு படி அதிகமாகவே ஈழத் தமிழர் உணர்வு உள்ளது-கருணாஸ்

http://thatstamil.oneindia.in/img/2010/07/25-karunas200.jpg
நாம் தமிழர் இயக்கத்தினரை விட ஒரு படி அதிகமாகவே என்னிடம் ஈழத் தமிழர் உணர்வு உள்ளது என்று கூறியுள்ளார் நடிகர் கருணாஸ்.

தன்னை இலங்கைக்குப் போகக் கூடாது என்று கூறி நாம் தமிழர் இயக்கத்தினர் மிரட்டுவதாக கூறுகிறார் நடிகர் கருணாஸ். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்துள்ளார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கருணாஸ் கூறியதாவது...

நானும், எனது மனைவியும், எங்கள் மகன் கென்-க்கு எங்கள் மூதாதையர் வாழ்ந்த இடமான இலங்கையில் உள்ள கதிர்காமர் முருகன் கோவிலில் முடி எடுப்பதற்கு முடிவு செய்திருந்தோம். அதன்படி, விமானம் மூலம் இன்று (நேற்று) காலை புறப்படுவதாக இருந்தோம். இந்த நிலையில் நேற்றிலிருந்து நாம் தமிழர் இயக்கத்தில் இருந்து பேசுவதாக கூறி எனது செல்போனில் பலர் பேசினார்கள். இலங்கைக்கு நான் செல்லக்கூடாது என்று என்னிடம் கூறினார்கள்.

நான் அவர்களுக்கு, இது எனது தனிப்பட்ட பயணம். அங்கு வருவதாக ஒருசிலருக்கு வாக்குறுதி அளித்துவிட்டேன். அதில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று கூறினேன். ஆனால், செல்போனில் மிரட்டலாகவும், அவதூறாகவும் பல எஸ்.எம்.எஸ்.களை அவர்கள் அனுப்பி வருகின்றனர்.

சிங்கள அரசு நடத்தும் கலை நிகழ்ச்சியில் துரோகி கருணாஸ் கலந்து கொள்கிறார். ரூ.10 லட்சத்துக்காக தனது மனைவியுடன் சென்று அங்கு கூத்தடிக்கப் போகிறார் என்றெல்லாம் கூறி அதில் எனது செல்போன் எண்ணையும் குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியுள்ளனர்.

என் இலங்கைக்கு செல்லும்போது எனது வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவி செய்த பஞ்சாப் இந்தியன் நடத்தும் சூரியன் எப்.எம். நிறுவனத்தின் ஆண்டு விழாவில் கலந்துகொள்வதாக இருந்தேன். அந்த நிறுவனத்தினர் தங்கள் நேயர்களையும் சந்திக்கும்படி கூறினார்கள்.

ஆனால் சூழ்நிலை சரியில்லாததால் அதற்கு நான் மறுத்துவிட்டேன். இதற்கெல்லாம் நடிகர் சங்கத்திடம் 3 நாளுக்கு முன்பு கடிதம் எழுதி அனுமதி பெற்று விட்டுத்தான் நான் செல்கிறேன். இந்த நிலையில் இந்த இயக்கத்தினர் இப்படி எனக்கு எதிராக செயல்படுகிறார்கள். நான் ஈழத்தமிழர் உணர்வற்றவன் என்பதுபோல என்னை சித்தரிக்கிறார்கள்.

25 அகதிக் குழந்தைகளை படிக்க வைக்கிறேன்

நான் பள்ளிக்கூடம் படிக்கும்போதே கொடிகளை விற்று ஈழத்தமிழருக்காக பணம் அனுப்பிய பல மாணவர்களில் நானும் ஒருவன். இங்குள்ள இலங்கை அகதிகள் 25 பேருக்கு என்ஜினீயரிங் கல்லூரியில் எனது செலவில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். இவர்களைவிட ஒரு சதவீதம் எனக்கு ஈழத்தமிழர் உணர்வு அதிகம் உண்டு.

ஈழத்தமிழரின் படுகொலையை வைத்துக் கொண்டு `நாம் தமிழர்' இயக்கத்தினர் கேவலமான அரசியலில் ஈடுபடக்கூடாது. இவர்களுக்கு ஈழத்தமிழர்கள் மீதான உணர்வு இருந்தால் அகதியாக இருக்கும் ஒரு மாணவனையாவது இவர்கள் தத்து எடுத்திருப்பார்களா?

ஈழ கிராமங்களை தத்தெடுக்கப் போகிறேன்

இனிமேல் எனது வாழ்நாளில் சம்பாதிக்கும் தொகையில் 40 சதவீதத்தை ஈழத் தமிழர்களின் கிராமங்களை தத்து எடுத்து, அவர்களுக்கு வீடு கட்டி கொடுத்து, அவர்களின் முன்னேற்றத்துக்காக செலவழிப்பேன் என்பதை இந்த இடத்தில் உறுதி அளிக்கிறேன்.

இவர்கள் எனது தாயை மிக கேவலமாக சித்தரித்து பேசுகிறார்கள். யார் கொலை மிரட்டல் விடுத்தாலும் நான் இலங்கை செல்வதை தடிக்க முடியாது. இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுக்க உள்ளேன். அடுத்ததாக முதல்வரையும் சந்தித்து புகார் கொடுப்பேன் என்றார் கருணாஸ்.

Comments

Most Recent