'மங்காத்தா'வுக்கு மல்லுக்கட்டு!

http://starbozz.files.wordpress.com/2009/01/ajith25.jpg
அஜீத் நடிக்கும் மங்காத்தா படத்துக்குப் புதுப் பிரச்சினை வந்துள்ளது. பிரச்சினை 'மங்காத்தா'வுக்கே வந்துள்ளதால் குழப்பமாகியுள்ளது நிலைமை.

அஜீத் நடிக்க கெளதம் மேனன் இயக்க, தயாநிதி அழகிரி தயாரிக்க ஒரு படம் உருவாகவிருந்தது. படத்திற்கு துப்பறியும் ஆனந்த் என பெயரிட்டனர். ஆனால் அதில் சில குழப்பம் ஏற்படவே ஆட்டம் கலைக்கப்பட்டது. கெளதம் மேனன் மட்டும் நீக்கப்பட்டார்.

மேனனுக்குப் பதில் வெங்கட் பிரபுவை உள்ளே கொண்டு வந்தனர். படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கிறார் இந்திக்கார நீத்து சந்திரா. இந்தப் படத்தில் நடிப்பது குறித்து புளகாங்கிதப்பட்டு சமீபத்தில் பேட்டியெல்லாம் அளித்திருந்தார் நீத்து என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பெயரை மங்காத்தா என்று மாற்றினர். இங்குதான் இப்போது பிரச்சினை வந்துள்ளது. அதாவது மங்காத்தா என்ற பெயரை ஏற்கனவே ஜெமினி பிலிம் சர்க்யூட்டைச் சேர்ந்த மனோ அக்கினேனி என்பவர் தயாரிப்பாளர் கவுன்சிலில் பதிவு செய்துள்ளாராம்.

இது தெரியாமல் அஜீத் படத்திற்கு மங்காத்தா என்று பெயரிட்டு இப்போது அந்தப் பெயரும் பாப்புலராகி விட்டது.

இந்த நிலையில்தான் மனோவிடம் டைட்டில் இருப்பது தெரிய வந்து குழப்பமான வெங்கட்பிரபு அவரை அணுகி தலைப்பை விட்டுத் தருமாறு கேட்டாராம். அதற்கு மனோ முடியாது என்று கூறி விட்டாராம். அஜீத்தும் கேட்டுப் பார்த்துள்ளார், மனோ மசியவில்லை. சில பல புள்ளிகளை விட்டும் பேசிப் பார்த்துள்ளனர். எதற்கும் பிடி கொடுக்கவில்லையாம் இந்த ஆந்திரத்து அக்கினேனி.

எனவே பெயரை மாற்றுவதா, அல்லது அக்கினேனியை வேறு விதமாக டீல் செய்வதா என்பது குறித்து தயாநிதி அழகிரியுடன் பேசவுள்ளார்களாம்.

சமீபத்தில் இப்படித்தான் விஜய்யின் காவல்காரன் படத்திற்கும் பிரச்சினை வந்தது. அந்தப் படத்தின் டைட்டிலை வைக்க எம்.ஜி.ஆரை வைத்து காவல்காரன் படத்தை எடுத்த சத்யா மூவிஸ் நிறுவனத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து படத் தலைப்பை காவல் காதல் என்று படு நூதனமாக மாற்றி வைத்தனர்.

இந்த நிலையில் அஜீத்தின் மங்காத்தாவுக்கு பிரச்சினை வந்துள்ளது. தலைப்பு மாறுமா என்பது தெரியவில்லை.

'தல' படத்துக்கு வந்த தலைப்புப் பிரச்சினையால் மங்காத்தா யூனிட்டார் படப்பிடிப்புக்கு போவதை சற்று தாமதப்படுத்தியுள்ளனராம்.

Comments

Most Recent