'நடிகர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்பதற்கு நான் எந்தத் தவறும் செய்யவில்லை' என்று உணர்ச்சிகரமாக பதில் அளித்தார் அசின்.ஈழத் தமிழர்கள் ...
'நடிகர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்பதற்கு நான் எந்தத் தவறும் செய்யவில்லை' என்று உணர்ச்சிகரமாக பதில் அளித்தார் அசின்.ஈழத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து அங்கு நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழ் திரையுலக கூட்டு நடவடிக்கை குழு தடை விதித்தது. இதையடுத்து தமிழ் திரையுலகினர் அந்த விழாவை புறக்கணித்தனர். இந்நிலையில் இந்தி பட ஷூட்டிங்குக்காக அசின் இலங்கை சென்றார். இதை தமிழ் திரையுலகினர் கண்டித்தனர். சென்னையில் நேற்று நடந்த நடிகர் சங்க பொதுக் குழு கூட்டத்தில் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, செயற்குழு உறுப்பினர் சத்யராஜ் பேசும்போது, 'அசின் இலங்கை சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டது தவறு.
இலங்கை அதிபர் ராஜபக்சேயின் மனைவியுடன் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தது கண்டு ரத்த கண்ணீர் வருகிறது. அவர் நடிகர் சங்க தலைவரை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றனர்.இதுகுறித்து மும்பையில் தங்கி இருக்கும் அசினிடம் இன்று கேட்டோம். உணர்ச்சிவசப்பட்ட அசின், ஆவேசமாக பதிலளித்தார். அதுபற்றிய விவரம்: இலங்கையில் நடந்த பட விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்று நடிகர் சங்கம் கூறியதை நான் கடைபிடித்தேன். அந்த தகவலை எனக்கு நடிகர் சங்கத்திலிருந்து கடிதம் மூலம் தெரிவிக்கவில்லை. பத்திரி கை, நெட் வாயிலாகத்தான் பார்த்தேன். இந்நிலையில் அங்கு நடந்த இந்தி பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள அழைத்தார்கள். அப்போதும் பட ஹீரோ சல்மான்கான், தயாரிப்பாளரிடம் இலங்கை செல்லக்கூடாது என்ற தமிழ் திரையுலக கூட்டமைப்பு தடை விதித்ததை எடுத்துச் கூறினேன். அதற்கு அவர்கள், 'அந்த தடை பட விழாவு க்கு மட்டும் தான். ஷூட்டிங் செல்லக்கூடாது என்ற சொல்லவில்லையே' என்று தெரிவித்தனர். அதன்பிறகுதான் இலங்கை சென்றேன். அங்கு சென்றபிறகு கஷ்டப்படும் தமிழ் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்கு மருத்துவ உதவி செய்யவும் முடிவு செய்தேன்.தமிழர்கள் இருக்கும் பகுதி க்கு செல்ல வேண்டுமென்றால் இலங்கை அரசின் அனுமதி பெற வேண்டும். இல்லாவிட்டால் அங்கு செல்ல முடியாது. ஏன், விமான நிலையத்திலிருந்து வெளியே வர வேண்டும் என்றால்கூட அந்நாட்டு அரசின் அனுமதி பெற வேண்டும். சமீபத்தில் அனுமதி இல்லாமல் வந்த ஐ.நா சபை உறுப்பினர்களை அந்நாட்டு அரசு திருப்பி அனுப்பிவிட்டது. அப்படியிருக்கும்போது அந்த அரசின் அனுமதி இல்லாமல் நான் எப்படி பாதிக்கப்பட்ட தமிழர்கள் பகுதிக்கு செல்ல முடியும். அந்த அடிப்படையில் நான் அரசிடம் அனுமதி கேட்டபோது, 'நானும் உங்களுடன் வருகிறேன்' என்று ராஜபக்சேவின் மனைவி கூறினார். அவரிடம், 'நீங்கள் வரக்கூடாது' என்று என்னால் தடுக்க முடியாது. பாதுகாப்புடன் என்னை தமிழர்கள் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகுதான் 10 ஆயிரம் தமிழர்களுக்கு கண் சிகிச்சை போன்ற மருத்துவ உதவியை என்னால் செய்ய முடிந்தது.
அங்கிருந்து புறப்பட நினைத்த போது ஒரு சிலர் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு, 'நீங்கள் இங்கேயே இருங்கள், போகாதீர்கள்' என்று அழுதனர். அதேபோல் இன்னும் சிலர், 'எங்களுக்கு கண் ஆபரேஷன் முடிந்த பிறகு அசினை பார்க்க வேண்டும்' என்றார்கள். ஒரு சிலர் பத்திரிகையில் பரபரப்பு கிளப்புவதற்காக எதையாவது பேசுகிறார்கள். மருத்துவமுகாமில் கலந்துகொண்டபோது நான் எடுத்துக்கொண்ட ஏராளமான புகைப்படங்கள் என்னிடம் இருக்கிறது. அதை வெளியிட்டு என்னாலும் பரபரப்பு தேடிக் கொள்ள முடியும். ஆனால் நான் அப்படிப்பட்ட மலிவான விளம்பரத்தை விரும்பவில்லை.நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூடும் சமயத்தை என்னை அழை த்து நேரில் விளக்கம் அளிக்க வாய்ப்பு கொடுத்திருந்தால், நிச்சயம் வந்திருப்பேன். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே முறைப்படி எந்த தகவலும் தரவில்லை. ராதாரவி, சத்யராஜ் போன்றவர்கள் தங்கள் கருத்தை கூறி இருக்கிறார்கள். அவர்கள் கூறியதை தவறு என்ற சொல்லவில்லை. அவர்களும் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தைதான் பிரதிபலித்திருக்கிறார்கள். அதைத்தான் நானும் செய்தேன்.
எனக்கு தடை விதிக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறார்கள். தடை விதிப்பதற்கும், மன்னிப்பு கேட்பதற்கும் நான் என்ன தவறு செய்தேன். அதற்கான வாய்ப்பு இல்லை. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவி செய்தது தவறா? இந்திய சட்டம் என்ன சொல்கிற தோ, நடிகர் சங்கம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்பேன். அதை மீற மாட்டேன். இதுவரை மீறியதும் இல்லை. இனிமேல் தமிழ் படத்தில் நடிக்க கூடாது என்று நடிகர் சங்கம் தடை விதித்தால் நான் தமிழ் படத்தில் நடிக்க மாட்டேன். ஏனென்றால் இது சங்கத்தின் உத்தரவு. அதேசமயம் நடிகர் சங்கம் ஒரு குழுவாக இலங்கை சென்று தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறினால் அந்த குழுவுடன் நானும் வரத் தயார். வரும் ஆகஸ்ட், செப்டம்பர் என 2 மாதங்கள் 'காவல் காதல்' படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். அந்தப்பட தயாரிப்பாளரின் சம்மதத்துடன் அந்த படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வரக்கூட நான் தயாராக இருக்கிறேன்.
Comments
Post a Comment