உறுப்பினராகாத நடிகர் நடிகைகளுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தடை!

http://thatstamil.oneindia.in/img/2010/08/09-oviya200.jpg

சென்னை: சங்கத்தில் உறுப்பினராகாதா நடிகர் நடிகைகளுக்கு வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தமிழில் நடிக்க தடைவிதிக்கப்படும் என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் படங்களில் புதுமுக நடிகர்-நடிகைகள் பலர் அறிமுகமாகின்றனர். இவர்கள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதில்லை. குறிப்பாக மலையாளம், தெலுங்கு, பட உலகில் இருந்து சாரை சாரையாக நிறைய நடிகைகள் வருகின்றனர். இவர்கள் ஓரிரு படங்களில் தலைக்காட்டி விட்டுப் போய் விடுவதால் நடிகர் சங்கக் கட்டுப்பாடுகளை மதிப்பதில்லை.

எனவே நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினராகி விட்டுத்தான் இனி புதுப் படங்களில் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. இதை மீறுவோர் நடிக்க முடியாது என்றும் எச்சரிக்கப்பட்டது. இதையும் பல நடிகர்-நடிகைகள் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து கடந்த மாதம் நடந்த நடிகர் சங்க பொதுக்குழுவில் சங்கத்தில் உறுப்பினராவதற்கு ஆகஸ்டு 15-ந் தேதி வரை கெடு விதிக்கப்பட்டது. அதன் பிறகும் உறுப்பினராகாதவர்களுக்கு படங்களில் நடிக்க ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

15-ந் தேதிக்கு பிறகு உறுப்பினராகாதவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவர்கள் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று சங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரிலீசாகி ஹிட் ஆன ‘களவானி’ ஓவியா இன்னும் உறுப்பினராகவில்லை. அவர் மேலும் பல படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்.

பாணா காத்தாடி, பட நாயகி சமந்தாவும் உறுப்பினராகவில்லை. மாஸ்கோவின் காவிரி என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.

ஜெனிலியா, ஹன்சிகா மோட்வானி ஆகியோரும் உறுப்பினராகவில்லை. ஜெனிலியா ஏற்கனவே சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ‘பழம்பெரும்’ நடிகையாகவும் மாறிப் போய் விட்டார்.

ஹன்சிகா மோட்வானி தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ளார். “வேலாயுதம்” படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார்.

மனிஷா கொய்ராலா பல தமிழ் படங்களில் நடித்து, திருமணமும் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். தற்போது மாப்பிள்ளை படத்தில் தனுஷ் மாமியாராக நடிக்கிறார். இத்தனை நடந்தும் இன்னமும் இவர் உறுப்பினராகவில்லை. இத்தனைக்கும் இவர் ரஜினி, கமலுடனும் ஜோடி போட்டு நடித்தவர்.

ஆனானப்பட்ட ஐஸ்வர்யா ராய் கூட தமிழில் இன்னும் உறுப்பினர் ஆகவில்லை. இவர் ஏற்கனவே தமிழில் இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ஜீன்ஸ், ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ரஜினியுடன் நடித்த எந்திரன் படம் அடுத்த மாதம் ரிலீசுக்கு தயாராகிறது. இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் நடிகர் சங்கத்தில் உறுப்பிராக வேண்டும் என்று ராதாரவி வற்புறுத்தியுள்ளார்.

கிருஷ்ண லீலை, காதல் சொல்ல வந்தேன், நந்தா நந்திதா படங்களில் நடிக்கும் மேக்னா சுந்தரும் உறுப்பினராகவில்லை.

இதுபோல உறுப்பினராகாமலேயே பஜனை பாடிக் கொண்டிருப்பவர்களின் பெயர்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 15-ந் தேதிக்கு மேல் இவர்களுக்கு நடிக்க தடை விதிக்கப்படுகிறது. அதாவது நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாவிட்டால் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் முதல் தமிழ் சினிமாவில் அவர்களால் நடிக்க முடியாது.

Comments

Most Recent