'மக்களைக் கவர்ந்த என் கண்கள் மக்களுக்கே'-கண் தானம் செய்த ஐஸ்!

http://thatstamil.oneindia.in/img/2010/08/23-aish-eye200.jpg
முன்னாள் உலக அழகி என்று சொல்லப்பட்டாலும், தனது நடத்தை மற்றும் பண்புகளால் எப்போதும் மக்கள் மனதில் நிரந்தர உலக அழகியாகவே நிலைத்திருப்பவர் இந்தியாவின் நம்பர் ஒன் நடிகையான ஐஸ்வர்யா ராய் பச்சன்.

இந்திய அழகின் சர்வதேசப் பிரதிநிதியாகத் திகழும் ஐஸ்வர்யா ராய், தனது பண்புக்கே சிகரம் வைத்தது போன்ற ஒரு செயலைச் செய்துள்ளார்.

தனது அழகான இரு கண்களையும் பொதுமக்களுக்கே தானம் செய்வதாக அறிவித்துள்ளார். 'நான் இறந்த பிறகு இந்தக் கண்களை பொதுமக்களுக்கே தானம் செய்ய வேண்டும்' என்று அவர் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.

மக்கள் மத்தியில் கண்தானம் செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதைச் செய்கிறாராம்.

இந்திய கண் வங்கி அமைப்புடன் சேர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே இந்த அமைப்பில் பிரபல இந்தி நடிகர் ஓம்புரியும் உள்ளார். அவரும் கண்களை தானம் செய்து இருக்கிறார். தற்போது ஐஸ்வர்யாராயும் கண்தானம் செய்கிறார்.

இதுபற்றி ஐஸ்வர்யாராய் கூறும்போது, "மக்கள் என்னைப்பற்றி நிறைய தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அதற்கு காரணமாய் இருப்பவை எனது கண்கள். இந்தக் கண்களை என்னைவிட அதிகம் நேசிப்பவர்கள் இந்த மக்கள்தான். எனவேதான் அவர்கள் விரும்பும் இந்த கண்களை அவர்களுக்கே தானமாகத் தருகிறேன்..." என்றார் உருக்கமாக.

ஐஸ்வர்யா ராய் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். அவரது முதல் சினிமா பிரவேசம் நடந்தது தமிழில்தான். மணிரத்னத்தின் இருவர் படமே அவர் நடித்த முதல் சினிமா. அதன் பிறகு ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

இப்போதும் தமிழில் அவருக்கு நிகரான நடிகை இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்தில் அவருக்கு நிகரான வேடத்தில் நடித்துள்ளார் ஐஸ்!

Comments

Most Recent