'முதல்வர் பேரன் பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார்...!' - ஆர்யா மீது சரமாரி புகார்!


http://thatstamil.oneindia.in/img/2010/08/10-chikku-bukku-200.jpg
முதல்வர் பேரன் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார் நடிகர் ஆர்யா என்று பரபரப்பாகக் குற்றம்சாட்டியுள்ளது பிரபல படத்தயாரிப்பு நிறுவனம்.
சிக்கு புக்கு படம் முடிந்து ரிலீஸ் செய்யும் தருவாயில், கடைசியாக 5 நாட்கள் டப்பிங் பேசுவதற்கு வராமல் ஆர்யா வேண்டுமென்றே இழுத்தடிப்பதாகவும், பலமுறை டப்பிங் தியேட்டரை வாடகைக்கு எடுத்தும் ஆர்யா வராமல் போனதால் தங்களுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மீடியா ஒன் குளோபல் என்ற நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளது.
தங்கள் புகாரில் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் கூறியுள்ளதாவது:
தான் நடிக்கும் மற்றொரு படமான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ரெட்ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளதால் முதலில் அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்காக சிக்குபுக்கு படத்தை வேண்டுமென்றே தள்ளிப்போட்டு வந்தார் ஆர்யா.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை முடித்துவிட்டுத்தான் அடுத்த படத்துக்குப் போக வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக எங்களிடம் ஆர்யா கூறிவந்தார். இது உண்மைதானா என்று உதயநிதியிடம் தயாரிப்பாளர் சங்கம் மூலம் விசாரித்தோம். ஆனால் அதை உதயநிதி மறுத்துவிட்டார். தான் எந்த வகையிலும் ஆர்யாவை வற்புறுத்தவில்லை, என் பெயரை அவர் தவறாகப் பயன்படுத்துகிறார் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்துதான் நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு புகார் கொடுத்தோம்.
ஆர்யா மீதான எங்கள் குற்றச்சாட்டு இவை:
ஆர்யா இது வரைக்கும் எங்கள் படத்தின் எந்த பிரமோஷனுக்கும் வரவில்லை.
25 வருடமாக படம் தயாரித்துக் கொண்டிருக்கும் நாங்கள் ஒரு நடிகனை கேட்டு படத்தை ரிலீஸ் பண்ணுவதா அல்லது தயாரிப்பாளர் முடிவில் படம் பண்ணுவதா? ஒரு நடிகரை கேட்டு படத்தை திரைக்கு கொண்டுவரும் நிலையில் நாங்கள் இல்லை.
நடிகர் ஆர்யா தேவையில்லாமல் முதல்வரின் பேரன் பெயரை தவறுதலாக பயன்படுத்துவதா?
இப்படி மாறி மாறி ஆள் மாறாட்டம் பண்ணுவது ஒரு வளரும் நடிகருக்கு அழகா?
என்னுடைய நண்பர் என்று ஆர்யாவை எல்லா பத்திரிக்கைகளுக்கும் பெருமையாகக் கூறிய இயக்குனர் மணிகண்டனை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை ஆர்யா என்று கூறப்பட்டுள்ளது.
முதல்வரின் பேரன் பெயரை ஆர்யா மிஸ் யூஸ் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Most Recent