'வெப்பம்' நித்யா, 'வாமனண்' பிரியா புடை சூழ 'பாய்ஸ்'சித்தார்த் ரீ என்ட்ரி



இளம் தெலுங்கு நடிகரான சித்தார்த் மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார். தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்கவும் அவர் ஆர்வமாக இருக்கிறாராம்.
மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் சித்தார்த். பின்னர் ஷங்கரின் கண்ணில் பட்டு பாய்ஸ் பட நாயகன் ஆனார். அவரது செட் நடிகர்களான பரத், நகுல் ஆகியோர் தமிழில் தனி நாயகர்களாக தனி ஆவர்த்தனம் செய்து வருகின்றனர். ஹரினி, ஜெனிலியா என பெயர் மாறி பிரபல நடிகையாகி விட்டார்.
மேற்கண்ட மூவரும் தமிழில் பிரபலமாக உள்ளனர். ஆனால் சித்தார்த் மட்டும் தெலுங்குக் கரைக்குப் போய் விட்டார். அங்கிருந்தபடி இந்தியிலும் கால் பதித்தார். இரு மொழிகளிலும் பிரபலமாக இருந்ததால் தமிழுக்கு அவர் வரவில்லை. இடையில், ஆயுத எழுத்து படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார் சித்தார்த். ஜெயேந்திரன் என்பவர் இயக்கும் புத்தம் புது காலை என்ற படத்தில் நடிக்கிறார் சித்தார்த். இப்படத்தை தெலுங்கிலும் எடுக்கின்றனர். அதற்கு 180 என்று பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தில் இரு நாயகிகள். பிரியா ஆனந்த் மற்றும் நித்யா மேனன். பிரியாவும் சரி, நித்யாவும் சரி படு அமர்க்களாக உள்ளனர். இளமை ஊஞ்சலாடும் இவர்கள் இருவரும் முறையே தெலுங்கிலும், மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளனர்.
பிரியாவைப் பொறுத்தவரை இவர் நடித்த முதல் தமிழ்ப் படம் வாமணன். பின்னர் புகைப்படம் படத்திலும் தலை காட்டியுள்ளார். தெலுங்கில் இரண்டு படங்களை முடித்துள்ளார்.
நித்யா மேனன், மலையாளத்தில் ஆகாச கோபுரம் படத்தின் மூலம் நடிகையானவர். தமிழில் தற்போது கெளதம் மேனனின் வெப்பம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சித்தார்த்துடன் ஜோடி போடவுள்ளார்.
கதை வித்தியாசமானதாம். அதேசமயம், காதல் கதைதானாம். இரு நாயகிகள் வேறு இருப்பதால் படம் களை கட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதுதவிர இன்னொரு தமிழ்ப் படத்திலும் நடிக்கவுள்ளாராம் சித்தார்த். தொடர்ந்து தமிழிலும் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.

Comments

Most Recent