ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்- பட அதிபர்

http://thatstamil.oneindia.in/img/2010/08/09-enthiran2-200.jpg

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் வெளியாகும் முன்பே பல சாதனைகளைப் படைத்து வருகிறது.
ஆடியோ உலகம் இதுவரை காணாத அளவு சிடிக்கள் விற்றுத் தீர்ந்த வண்ணம் உள்ளன. இன்னொரு பக்கம் இந்தப் படத்தின் மாநிலம் தழுவிய விற்பனை உரிமை பல கோடிகளுக்கு விற்றுச் சாதனைப் படைத்துள்ளது.
தெலுங்கில் ரோபோ என்ற பெயரில் வெளியாகும் எந்திரன் படத்துக்கு ரூ 30 கோடி விற்பனை உரிமையாக தரப்பட்டுள்ளதை முன்பே வெளியிட்டிருந்தோம். இந்த விலை இந்திய சினிமாவில் எந்த மொழியிலும் டப்பிங் படத்துக்கு தரப்பட்டதில்லை. இது ஒரு புதிய சரித்திரம் என்றே தெலுங்கு சினிமா உலகம் வர்ணிக்கிறது.
இந்தப் படத்தை வாங்கியிருப்பவர் சதலவாடா ஸ்ரீனிவாச ராவ். இவரது திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா பிலிம்ஸ்தான் வாங்கிருக்கிறது.
எந்த நம்பிக்கையில் ஒரு டப்பிங் படத்துக்கு இவ்வளவு விலை கொடுத்தார் ஸ்ரீனிவாச ராவ்?
“ரஜினி – ஷங்கர் கூட்டணி மேல உள்ள நம்பிக்கைதான். சிவாஜி படம் இங்கே படைத்த வசூல் சாதனையை, பெரிய நடிகர்களின் ஒரிஜினல் தெலுங்குப் படம் கூட செய்ததில்லை. இன்றைய தேதிக்கு நாட்டிலேயே மிகவும் பவர்புல் நட்சத்திரம் என்றால் அது ரஜினி சார்தான். அவரை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
அடுத்து ஷங்கர், ஐஸ்வர்யா ராய். இருவருமே நம்பிக்கை நட்சத்திரங்கள். ஷங்கரின் படங்கள் தெலுங்கில் சோடை போனதே இல்லை. கலாநிதி மாறன் நிச்சயம் இந்தப் படத்தை பெருமளவில் புரமோட் பண்ணுவார்.
என் கணக்குப்படி ஒரே வாரத்தில் இந்த 30 கோடியை எடுத்துவிடுவேன். ஆந்திர முழுவதும் 600 திரையரங்குகளில் ரோபோவை ரிலீஸ் செய்கிறோம். திருட்டு டிவிடி வராமலிருக்க போதிய நடவடிக்கையும் எடுத்துள்ளோம்” என்கிறார் ஸ்ரீனிவாஸ ராவ்.
கேரளாவில்…
எந்திரன் படம் கேரளாவில் நேரடி தமிழ்ப் படமாக வெளியாகிறது. தமிழகத்தில் வெளியாகும் நேரத்திலேயே கேரளத்திலும் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு ‘சிவாஜி’க்கு தந்ததை விட இருமடங்கு விலை தந்துள்ளார் கேரள விநியோகஸ்தர்.
கர்நாடகத்தில் இழுபறி?
ஆனால் கர்நாடகத்தில் மட்டும் இன்னும் விலை முடிவாகவில்லை என்று தெரிகிறது. சன் பிக்சர்ஸ் ரூ 8 கோடி வரை கேட்பதாகவும், விநியோகஸ்தர்கள் தரப்பில் இதற்கு இணக்கமான பதில் தரப்படவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments

Most Recent