திருப்பதி கோயிலுக்கு குடும்பத்தினருடன் வந்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா திருமண...
திருப்பதி கோயிலுக்கு குடும்பத்தினருடன் வந்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா திருமணம் சென்னையில் கடந்த 3ம்தேதி நடந்தது. இதையடுத்து மனைவி லதா, மகள் சவுந்தர்யா, மருமகன் அஸ்வின் ஆகியோருடன் திருமலைக்கு காரில் சென்றார் ரஜினி. அங்குள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் தங்கினார். பின்னர் ஏழுமலையான் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சாமி கும்பிட்டார். கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் ரஜினிக்கு லட்டு மற்றும் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: எனது மகள் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது. அதற்காக ஏழுமலையானுக்கு நன்றி செலுத்த குடும்பத்துடன் வந்தேன். இம்மாதம் வெளிவரவுள்ள 'எந்திரன்' படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் குழந்தைகள் முதல் இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும். 'எந்திரன்' மிகப் பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறவும் ஏழுமலையானை நான் வேண்டிக் கொண்டேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார். ரஜினிகாந்த் வந்திருப்பதை அறிந்து திடீரென கோயில் வாசலில் அவருடைய ரசிகர்கள் திரண்டனர். ஆட்டோகிராப் வாங்க அவர்கள் முண்டியடித்தனர். 'சூப்பர் ஸ்டார் வாழ்க.. ரோபோ வாழ்க' என கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினியின் மகள், மருமகனுக்கு வாழ்த்து தெரிவிக்க சிலர் முயன்றனர். ரசிகர்கள் அனைவருக்கும் ரஜினி வணக்கம் தெரிவித்துவிட்டு கிளம்பினார்.
Comments
Post a Comment