ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா திருமணம் அரசியல் பிரமுகர்கள்,நடிகர்கள் வாழ்த்து

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா – அஸ்வின் திருமணம் சென்னையில் இன்று காலை நடந்தது. அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும் சென்னை தொழிலதிபர் ஆர்.ராம்குமார் – ஹேமா தம்பதியின் மகன் அஸ்வினுக்கும் சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடந்தது. இதற்காக மணமேடை பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தங்க நிற முலாம் பூசப்பட்ட குடை வடிவில் மணமேடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ரஜினிகாந்த் பட்டு வேட்டி, பட்டு சட்டையுடன் தலையில் மராட்டிய பாரம்பரிய தலைப்பாகை அணிந்திருந்தார். அவருடைய அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாடும் தலைப்பாகை அணிந்திருந்தார்.
ரஜினி – லதா தம்பதியருக்கு மணமக்கள் அஸ்வின் – சவுந்தர்யா பாதபூஜை செய்தனர். மணமகனின் கால்களை ரஜினியும் கழுவி சடங்குகள் செய்தார். மகளை தாரைவார்த்துக் கொடுத்தார். பின்னர், ரஜினியின் மடியில் சவுந்தர்யா அமர்ந்திருக்க, அவரது கழுத்தில் அஸ்வின் தாலி கட்டினார். சவுந்தர்யா அரக்கு நிறத்தில் மடிசார் கூரைப்பட்டு உடுத்தியிருந்தார். மணமகன் பஞ்சக்கச்சம் – அங்கவஸ்திரம் அணிந்திருந்தார். தாலி கட்டி முடித்ததும் அக்னிக் குண்டத்தை தம்பதிகள் வலம் வந்தனர். அவர்களது கையை பிடித்தபடி ரஜினியும் முன்னே சென்றார்.
திருமண விழாவில் ஏராளமான அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், டைரக்டர் கே.பாலச்சந்தர், ஆர்எம் வீரப்பன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன், உள்ளிட்டோர் மேடைக்கு எதிரே போடப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தனர். அந்த இடத்துக்கு வந்து தலைவர்களிடம் மணமக்கள் ஆசிபெற்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மதிமுக தலைவர் வைகோ, தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பா.ஜ. முன்னாள் தலைவர் இல.கணேசன்,  திருநாவுக்கரசர், கார்த்தி ப. சிதம்பரம், ஏ.சி.சண்முகம். திரைப்பட இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம்-சுகாசினி, பாக்யராஜ்-பூர்ணிமா, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, பாண்டியராஜன், ஹரி, தயாரிப்பாளர்கள் டி.ஜி.தியாகராஜன், எஸ்.தாணு, புஷ்பா கந்தசாமி, கவிஞர் வைரமுத்து,
கமல்ஹாசன், கவுதமி, சிரஞ்சீவி, அம்பரீஷ், பிரபு, ராம்குமார், சுமன், சிவக்குமார், மோகன்பாபு, சின்னிஜெயந்த், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகைகள் மீனா, ஆண்ட்ரியா, ஸ்ரேயா ரெட்டி, வைஜெயந்திமாலா, விஜயகுமார் – மஞ்சுளா, பாடகிகள் பி.சுசீலா, விஜய் ஜேசுதாஸ் உள்பட ஏராளமானோர் வாழ்த்தினர். விழாவுக்கு வந்தவர்களை தனுஷ் – ஐஸ்வர்யா மற்றும் மணமகன் குடும்பத்தினர் வரவேற்றனர். முன்னதாக நேற்று மாலை திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன், ஸ்ரீதேவி – போனிகபூர் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதே மண்டபத்தில் இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

Comments

Most Recent