எந்திரன் திரைப்படத்தின் திருட்டு விசிடி விற்பவர்களை கண்டுபிடித்து காவல் துறையிடம் ஒப்படைக்க தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் களம் இறங்கியு...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய திரையுலகம் இதுவரை கண்டிராத பெரும் செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை தியேட்டரில் பார்த்தால்தான் முழுமையாக ரசிக்க முடியும் என்பதால் டிக்கெட் வாங்க கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில் மதுரை அடுத்த மேலூர் பஸ் நிலையம் அருகே உள்ள ராணி வீடியோ சென்டரில் எந்திரன் படத்தின் திருட்டு விசிடி விற்கப்படுவதாக ரஜினி ரசிகர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே அந்த கடை முன்பு ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுப்புராஜ், கொட்டாம்பட்டி ஒன்றிய தலைவர் துரை, ராமநாதபுரம் திரைப்பட விநியோகஸ்தர் சங்க செயலாளர் சாகுல் ஹமீது உட்பட 100க்கு மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர்.
போலீசுக்கு தகவல் சொல்லியும் நீண்ட நேரமாக வராததால் ரசிகர் மன்ற பொறுப்பாளர்களே கடையில் விசாரித்து திருட்டு விசிடி விற்பனை நடப்பதை உறுதிப் படுத்திக் கொண்டனர். பின்னர் அங்கு பதுக்கி வைத்திருந்த திருட்டு விசிடிக்களை கைப்பற்றினர். திருட்டு விசிடிகளையும் அதை விற்பனை செய்த நிஜாமுதீனையும் போலீசில் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதற்குள் ஆவேசமான ரசிகர்கள் தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் எந்திரன் படத்தை தியேட்டரில் பார்க்கவிடாமல் தடுக்க சதி செய்வதாக கோஷமிட்டபடி நிஜாமுதீனை பிடித்து, அடித்து உதைத்தனர். பின் அவரை போலீசில் ஒப்படைத்தனர். கையும் களவுமாக குற்றவாளியை பொதுமக்களே பிடித்து கொண்டு வந்து ஒப்படைத்ததால் போலீசார் அவரை கைது செய்து விசிடிகளை பறிமுதல் செய்தனர்.
ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறும்போது, 'எந்திரன் சிடி விற்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர். திருட்டு விசிடியை ஒழித்து திரையுலகை காப்பாற்ற முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், அதற்கு கலங்கம் உண்டாக்கும் விதமாக திருட்டு விசிட் கும்பல்கள் செயல்பட காவல்துறை அனுமதிக்கக்கூடாது என்று ரசிகர்கள் வலியுறுத்தினர். எந்திரன் பட விசிடி விற்பனை செய்தவரை ரசிகர்களே பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் விசிடி விற்பனை செய்யும் கடைகளை கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு சில இடங்களை சந்தேகத்தின்பேரில் போலீசுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கூறும்போது, 'எந்திரன் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதை பொறுக்க முடியாத சில விஷமிகள் திருட்டு விசிடி தயாரித்து விற்பனை செய்யக்கூடும் என்று நினைத்தோம். அது உண்மையாகி இருக்கிறது. ஆனால் ரஜினி படை மிகவும் பெரியது. எங்கே யார் திருட்டு விசிடி விற்றாலும் அதை கண்டுபிடிக்க எங்களால் முடியும். அத்தகைய ஆசாமிகளை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைப்போம்' என்றார்.
Comments
Post a Comment