ரசிகர்களிடம் சிக்கி கதறிய அசின்... காப்பாற்றிய ஷாரூக்!மும்பை: திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை அசின் ரசிகர்களிடம் எக்குத் தப்பாக மாட்டிக் கொண்டார். அவரைக் கஷ்டப்பட்டுக் காப்பாற்றினார் ஷாரூக்கான்.

மும்பையில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நடிகை அசின். இந்த விழாவில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உள்பட பல விஐபிக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு வருகிற நட்சத்திரங்களை வேடிக்கைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர் அரங்குக்கு வெளியே.

விழா துவங்கிய நேரத்தில் அரங்கின் பின் வாசல் வழியாக அசின் உள்ளே நுழைய முயன்றார். அப்போது அவரைப் பார்த்துவிட்ட ரசிகர்கள் உற்சாக மிகுதியால் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.

ஆரம்பத்தில் வெறும் ஆர்வத்தில் அசினை நெருங்கிய இந்த ரசிகர்கள், பின்னர் தங்கள் வக்கிரத்தை காட்ட ஆரம்பித்துள்ளனர். கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட ரசிகர் கூட்டத்திடம் மாட்டிக் கொண்ட அசினை தொடக் கூடாத இடங்களில் தொட்டும், கிள்ளியும் சில்மிஷம் செய்துள்ளனர்.

இதனால் ஒரு கட்டத்தில் அசின் கத்திக் கதற, உடனடியாக விஷயத்தைக் கேள்விப்பட்ட ஹீரோ ஷாரூக்கான் ஓடி வந்து அசினைக் காப்பாற்றியுள்ளார். அவருடன் ஷாரூக்கானின் 8 உதவியாளர்களும் வந்து கூட்டத்தை விரட்டியடித்தனர்.

பின்னர் அசினின் கையைப் பற்றி அழைத்துச் சென்ற ஷாரூக், அவரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். எப்போதும் தக்க பாதுகாப்புடன் வருமாறு அறிவுறுத்தினாராம்.

Comments

Most Recent