கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன் மறைவு



பெங்களூர், டிச.30: பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன் (59) மாரடைப்பால்  மைசூரில் புதன்கிழமை (டிச.30) அதிகாலை மரணமடைந்தார். பெங்களூருக்கு கொண்டுவரப்பட்ட  அவரது உடலுக்கு கன்னடத் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

"சாகச சிம்ஹா' என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டுவந்தவர் விஷ்ணுவர்த்தன். மறைந்த நடிகர் ராஜ்குமாருக்கு அடித்தபடியாக கர்நாடகத்தில் புகழ்பெற்று விளங்கியவர். ஓய்வுக்காக மைசூர் சென்றிருந்த அவர், அங்குள்ள

கிங்க்ஸ் கோர்ட் ஹோட்டலில் தங்கியிருந்தார். செவ்வாய்க்கிழமை அவர் மைசூரில்

உள்ள விக்ரம் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கொண்டார். பிறகு

அவர் ஹோட்டலுக்குத் திரும்பினார். புதன்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை  குடும்பத்தார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் மாரடைப்பால் 2.30

மணியளவில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அப்போது விஷ்ணுவர்த்தனின் மனைவியும் நடிகையுமான பாரதி, மருமகன் அனிரூத்  ஆகியோர் உடனிருந்தனர். பிறகு அவரது உடல் மைசூரிலிருந்து புதன்கிழமை காலை 6.30 மணிக்கு பெங்களூரில்  ஜெயநகரில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதல்வர் எடியூரப்பாவும், அமைச்சர்களும், திரையுலங்கினரும் அஞ்சலி செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து விஷ்ணுவர்த்தனின் உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக

காலை 9.45 மணிக்கு பசவனகுடியில் உள்ள நேஷனல்  கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டது. அங்கு அவருக்கு ஏராளமான ரசிகர்களும்,  பொதுமக்களும்

வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். விஷ்ணுவர்த்தனுக்கு கீர்த்தி, சந்தனா என்ற 2 தத்தெடுக்கப்பட்ட மகள்கள் உள்ளனர்.

சிறந்த நடிகர்...

விஷ்ணுவர்தனின் இயற்பெயர் சம்பத்குமார். அவர் 18-9-1950-ல் மைசூர் சாமந்திபுரத்தில் பிறந்தார். அவரது  தந்தை எச்.எல். நாராயணராவ், திரைக்கதை

ஆசிரியர் ஆவர். பிரபல இயக்குநரும்  ஞானபீட விருதுபெற்றவருமான கிரீஷ் கர்நாட், 1972-ல் தான் இயக்கிய வம்சருகா என்ற திரைப்படத்தின் மூலம் கன்னடத்

திரையுலகிற்கு விஷ்ணுவர்த்தனை அறிமுகம் செய்துவைத்தார். அப்போது சம்பத்குமார் என்ற பெயரை விஷ்ணுவர்தன் என்று மாற்றினார்.

1973-ல் புட்டண்ணா கனகல் இயக்கிய நாகரஹாவு என்ற படத்தின் மூலமும், ராமாச்சாரி ஆகிய படத்தின் மூலமாகவும் அவர் பிரபலமானார். நாகரஹாவு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விஷ்ணுவர்த்தனுக்கு மாநில அரசு விருது வழங்கியது. அவர் இதுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் 200 படங்களில் நடித்துள்ளார். அவர்

கடைசியாக ஆப்த ரக்ஷகா என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் இன்னும் திரைக்குவரவில்லை. அது அவரது 200-வது படமாகும்.

தமிழ்ப் படங்கள்:

விஷ்ணுவர்த்தன் நடித்து கடைசியாக வெளியவந்த படம் பெல்லாரி நாகா என்ற திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. கன்னடத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களிலும் விஷ்ணுவர்த்தன் நடித்துள்ளார். விடுதலை மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா ஆகிய தமிழ்ப் படங்களில் ரஜினி காந்துடனும், கெüரவர் என்ற மலையாளப் படத்தில் மம்முட்டியுடன் நடித்தார்.

மறைந்த இயக்குநர் ஸ்ரீதர், அலைகள் என்ற படத்தின் மூலம் இவரை அறிமுகப்படுத்தினார். தமிழிலிருந்து கன்னடத்துக்கு டப் செய்யப்பட்ட எஜமானா படத்திலும்  முங்காருமழை படத்திலும் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். விஷ்ணுவர்த்தன் ஒரு பாடகரும் ஆவார். சாயாத்ரிய சிம்மா படத்தில் நடித்தன் மூலம் விஷ்ணுவர்த்தனை சாகச சிம்ஹா என்று ரசிகர்கள் அன்போடு அழைத்தனர்.  அமைதியான சுபாவமுடைய அவர் திரையுலகினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடன் அன்புடன் பழகியவர். திரையுலகிற்கு பெரும் சேவையாற்றிதற்காக விஷ்ணுவர்த்தனுக்கு கடந்த 2005-ம் ஆண்டில் டாக்டர் பட்டம் வழங்கி பெங்களூர் பல்கலைக்கழகம் கெüரவித்தது. கடந்த 37  ஆண்டுகளாக நடித்து அனைவரது உள்ளத்திலும் நீங்கா இடம்பிடித்த விஷ்ணுவர்த்தன்,   தீடீரென மரணமடைந்தது கன்னடத் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Comments

Most Recent