தொலைக்காட்சி கிறிஸ்துமஸ்

இந்த வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கியமான இடத்தைப் பிடித்தவை, எம்ஜிஆர் நினைவு நாளும் கிறிஸ்துமஸýம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. வியாழக்கிழமையன்று, அனேகமாக எல்லாச் சானல்களும் எம்ஜிஆர் படம், பாடல்கள் என்று ஏதாவது ஒருவகையில் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி செலுத்தின. கலைஞரிலும் ஜெயாவிலும் ஒரே நேரத்தில் எம்ஜிஆர் படங்கள். ஜெயா தொலைக்காட்சியினர் ஒளிபரப்பிய 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் பிரிண்டை எங்கிருந்துதான் தேடிப் பிடித்தார்களோ அப்படி ஒரு மோசமான பிரிண்ட். அந்தப் படத்தின் நல்ல பிரிண்டிற்கு அவ்வளவு பஞ்சமா என்ன?

ஆனால் இந்தக்குறையை மறக்க வைத்தது, எம்ஜிஆர் பற்றி அவர்கள் ஒளிபரப்பிய தொகுப்பு. அந்தத் தொகுப்பில் ஒளிபரப்பப்பட்ட, அவர் வாழ்ந்த காலத்தைய காட்சிகள், அவர்மீது மக்கள் எத்தகைய அன்பு வைத்திருந்தார்கள் என்பதைக் கண்முன் கொண்டு வந்தன. அவரது உடல் மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற, உணர்வுப்பூர்வமான இறுதி ஊர்வலக் காட்சிகள் மனதை நெகிழ வைத்தன. இறுதி ஊர்வலத்துடன் நிகழ்ச்சியை முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஜெயலலிதா பற்றியும் கடைசியில் இணைத்திருக்க வேண்டியது அவசியம்தானா? எம்ஜிஆர் சமாதியில் அஞ்சலி செலுத்த வந்திருந்த மக்கள் கூட்டத்தைச் செய்திகளில் பார்த்தபோது, மறைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றும் மக்கள் மனதில் அவர் நீங்கா இடம் பிடித்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

கிறிஸ்துமஸ் தினச் சிறப்பு நிகழ்ச்சிகளைக் காணுமாறு, ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே நேயர்களைக் கூவிக் கூவி அழைத்துக்கொண்டிருந்தன, எல்லாச் சானல்களும். காலை முதலே கிறிஸ்துமஸ் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிப் புண்ணியம் தேடிக்கொண்டது மக்கள் தொலைக்காட்சி. தேம்பாவணியைத் தேன்குரலில் கொடுத்தார் ஒரு சகோதரி. தொடர்ந்து ஒளிபரப்பான 'மூவர் தமிழ்' நிகழ்ச்சி,  கிறிஸ்தவர்களின் தமிழ்த்தொண்டு பற்றிப் பல்வேறு தகவல்களைத் தந்தது. வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகிய மூவரின் தமிழ்ப்பணி பற்றிய நிகழ்ச்சி என்றபோதிலும் எல்லீஸ், ஹென்ரிக் பாதிரியார் போன்றோரின் பங்களிப்பையும் குறிப்பிடத் தவறவில்லை.  தமிழ்ப் பற்றாளர்கள் பற்றிய நிகழ்ச்சியில் வரைபடத்தை மட்டும் ஆங்கிலத்தில் காட்டியது ஏன் என்று புரியவில்லை. கவனிக்க மறந்துவிட்டார்களோ?

தேவாலயங்கள் பற்றிய தொகுப்பில் அளிக்கப்பட்ட தகவல்களும் காண்பிக்கப்பட்ட காட்சிகளும் சுவாரசியமானவை. பண்டிகைக்காலத்தில் தொலைக்காட்சி முன் அமர்ந்திருப்போர் அதனைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி, நேரில் பார்க்க முடியாத தங்கள் உற்றார் உறவினருக்குத் தொலைக்காட்சி மூலம் வாழ்த்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பளித்த 'வாழ்த்துக்கள்' நிகழ்ச்சியும் பாராட்டத்தக்கது. பனிச்சாரல், கிறிஸ்துமஸ் குடில், யார் இந்தத் தாத்தா, விதவிதமாய் விளையாட்டு, வாடிகன் தூதர் என,  பண்டிகையிலிந்து அதிகம் விலகிச் செல்லாமல் நிகழ்ச்சிகளைத் தந்த மக்கள் தொலைக்காட்சி, கிறிஸ்துமஸ் தின சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான முதல் மதிப்பெண்ணைப் பெறுகிறது.

இதற்கு அடுத்தபடியாகக் குறிப்பிடவேண்டுமென்றால் அது விஜய் தொலைக்காட்சியைத்தான். இதில் ஒளிபரப்பான "ள்ண்ய்ஞ் ற்ட்ங் ள்ங்ஹள்ர்ய் 2009" முன்னோட்டம் வியாழக்கிழமை மாலையே கிறிஸ்துமஸ் மூடுக்கு மக்களை அழைத்துச் சென்றது எனலாம். வெள்ளியன்று காலை கிறிஸ்துமஸ் பாடல்களுடன் பண்டிகையைத் தொடங்கிய விஜய் தொலைக்காட்சியில், கிறிஸ்து யார்? என்பதையும், அவர் ஏன் மனிதனாகத் தோன்றினார்? என்பதையும் விளக்கினார்கள் மதபோதகர்கள். கிறிஸ்துமஸ் தாத்தாவின் தொப்பியணிந்த பெண் தொகுத்து வழங்க, முழுக்க முழுக்கக் கிறிஸ்துமஸ் சார்ந்த காலையாகவே மலர்ந்தது விஜய் தொலைக்காட்சியில். அன்று மாலை ஒளிபரப்பான நண்ய்ஞ் ற்ட்ங் ள்ங்ஹள்ர்ய் 2009  நிகழ்ச்சி நிச்சயமாக நேயர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டிருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை. பள்ளி, கல்லூரிகளிலிந்து வந்த இளஞ்சிட்டுக்களின் கிறிஸ்துமஸ் பாடல்கள் உங்களைக் கவரவில்லை என்றால்தான் ஆச்சரியம். நம்மைக் கவராமல் போனது, பரிசுத்தொகை வெறும் ஐம்பதாயிரம் என்பதுதான்.

கிறிஸ்துமஸ் தினச் சிறப்பு நிகழ்ச்சியாகக் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  'ராஜா ராஜாதான்'  என்கிற,  இளையராஜா பற்றிய சிறப்புத் தொகுப்பு, வயதானபோதிலும் ராஜா ராஜாதான் என்பதை நிரூபித்தது. 'நான் தேடும் செவ்வந்திப் பூவிது' என்ற பாடலைக் கேட்டவுடன், 'நாம் தேடும் செவ்வந்திப் பூவிது, நல்ல நாள் பார்த்து, இந்தச் சானலில் பூத்தது' என்று பாடத் தோன்றியது. அங்கிருந்து  'பறந்து செல்ல வழியில்லையோ'  என்று  பார்த்தால்,  இல்லவே இல்லை, அசையவிடாமல் அனைவரையும் கட்டிப் போட்டுவிட்டார் ராஜா. அதேபோல் 'ஆயிரத்தில் ஒருவன்'  இசைத்தட்டு வெளியீட்டு விழா, சன் தொலைக்காட்சியில். அது சரி, இவற்றுக்கும் கிறிஸ்துமஸýக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்கும் 'ஞானசூனியங்கள்' யாராவது தமிழகத்தில் இருக்கிறார்களா என்ன?

மற்றச் சானல்களும் கிறிஸ்துமஸ் தினச் சிறப்பு நிகழ்ச்சிகளை "ஒளிபரப்பின' என்று மட்டுமே கூறமுடிகிறது. ஒருசில நிகழ்ச்சிகளைத் தவிர, பெரும்பாலும் திரைப்படங்களும், திரைக் கலைஞர்களது பேட்டிகளும் என, பண்டிகைக்குச் சற்றும் தொடர்பில்லாமல், முற்றிலும் வியாபார நோக்கில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றி வேறு எப்படிக் குறிப்பிடுவதாம்?  நல்லவேளை, 'சனிக்கிழமையன்று, நமது(உங்கள்) தொலைக்காட்சியில், சுனாமி தினச் சிறப்பு நிகழ்ச்சிகளைக் காணத்தவறாதீர்கள்!' என்றும், 'நிகழ்ச்சிகளை வழங்குவோர், இணைந்து வழங்குவோர்' என்றும் எந்தச் சானலிலும் விளம்பரங்கள் வரவில்லை. அந்தமட்டில் எல்லாச் சானல்களும் பாராட்டுக்குரியவையே...!

Comments

Most Recent