'மார்கழி 16' சினிமா படப்பிடிப்பு நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. விக்கிரமாசிங்கபுரத்தை அடுத்துள...
'மார்கழி 16' சினிமா படப்பிடிப்பு நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
விக்கிரமாசிங்கபுரத்தை அடுத்துள்ள பாபநாசம் பகுதியில் நேற்று படப்பிடிப்பு நடந்தது. நீங்கள் கேட்டவை படத்தின் மூலம் பிரபலமான பானுசந்தர் மகன் ஜெயந்த் இந்த படத்தின் முலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகம் ஆகிறார்.
மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான ஸ்ரீநிதி, இந்த படத்தின் மூலம் கதாநாயகி ஆகிறார். 10ம் வகுப்பு மாணவி அவர். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் அமைத்துள்ளார் இவர்.
இந்தப் படத்தின் இயக்குனர் கே.ஸ்டீபன், தயாரிப்பாளர் ராஜ்குமார், இசையம்மைப்பாளர் கேபி பாபி உள்பட பலர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள்.
வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றும் பட்டதாரி இளைஞனைப் பற்றிய கதை இது. மார்கழி 16ம் தேதி அன்று ஆங்கில புத்தாண்டு முடியும். புத்தாண்டை வரவேற்கும் அன்றைய தினத்தில் கதாநாயகன்-நாயகி சந்தித்து கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இவர்களுக்குள் ஏற்படும் மோதல் பின்னர் காதலாகிறது. கூடவே எதிர்ப்புகளும் வலுக்கிறது. இறுதியில் அவர்கள் காதல் கை கூடியதா என்பது கிளைமாக்ஸ்.
படத்தின் நாயகி ஸ்ரீநிதி கூறுகையில், "மார்கழி 16மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறேன். நெல்லை மாவட்டத்தில் பாபநாசத்தை புண்ணியத் தலமாக கருதுகிறேன். பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நீராடினால் பாவங்கள் எல்லாம் விலகி ஓடும் என்று கேரளாவில் பெருமையாக சொல்வார்கள். அதை நிஜத்தில் உணர்கிறேன்" என்றார்.
இந்த படத்துக்கான ஒரு பாடல் தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள வான் தீவில் படமாக்கப்பட உள்ளது.
Comments
Post a Comment