அதிசய மனிதர் ரஜினி!-அமிதாப் வியப்பு



பா படத்தில் 12 வயது சிறுவனாக நடித்து சாதனை செய்த அமிதாப் பச்சனை சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மும்பையில் நேரில் சந்தித்து பாராட்டினார்.

இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் இந்திய நடிகர்களுக்கு மிகச் சிறந்த முன் மாதிரியாக அமிதாப் திகழ்வதாகவும் ரஜினி கூறினார்.

இந்தச் சந்திப்பு குறித்து அமிதாப் தனது பிளாக்கில் கூறியுள்ளதாவது:

"ரோபோ படப்பிடிப்புக்காக ஐஸ்வர்யா ராயுடன் லோனாவாலா பகுதிக்கு வந்திருந்த நண்பர் ரஜினிகாந்த் என்னைச் சந்திக்க வந்திருந்தார்.

எனக்கும் ரஜினிக்கும் நீண்ட கால பழக்கம். இருவரும் பல படங்களில் நடித்துள்ளோம். நிறைய விஷயங்களைப் பேசியுள்ளோம். எங்கள் நட்பில் அன்றும் இன்றும் எந்த மாறுதலுமில்லை.

சென்னையில் அவருக்காக பா சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்திருந்தோம். படம் பார்த்த பிறகு முதல் முறையாக என்னை அவர் இப்போது பார்க்க வந்திருந்தார். படம் பார்த்து முடித்ததுமே என்னிடம் பேச அவர் முயன்றும், பேச முடியாமல் போனது.

பா படம் குறித்தும் எனது நடிப்பு பற்றியும் ரஜினி மிக உயர்வாகப் பேசினார். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்தும் மேல் அவரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். அவர் என்னிடம் கூறுகையில், 'உங்களுடைய பா படம் பார்த்துவிட்டு உண்மையில் நாங்கள் திகைத்துப் போனோம். அது படத்தின் கதை மற்றும் உணர்ச்சிப் பூர்வமான காட்சிகளால் மட்டுமல்ல, உங்களது அற்புதமான நடிப்பைப் பார்த்ததினால். இனி நாங்கள் என்ன செய்யப் போகிறோம்...!' என்றார்.

கலையுலக நண்பர் ஒருவருடன் படைப்புலகம், வாழ்க்கை, நம்மைச் சுற்றி நிகழும் விஷயங்கள் குறித்துப் பேசுவது ஒரு இனிய அனுபவம். அந்த அனுபவத்தை ரஜினி எனக்குத் தந்தார் இன்று.

ரஜினியின் வாழ்க்கை ஒரு அதிசயம்... ஒரு பஸ் கண்டக்டராக வாழ்க்கையை ஆரம்பித்து, இன்று ஏராளமான ரசிகர்களின் மனதில் கடவுளுக்கு நிகராய் அமர்ந்திருக்கும் மனிதர் அவர். ஆனாலும் இன்றும் அதே எளிமையைத் தொடர்கிறார்" என்று எழுதியுள்ளார்.

Comments

Most Recent