விஷ்ணுவர்தன் மறைவு எனக்கு தனிப்பட்ட பேரிழப்பு! - ரஜினி



எனது 32 ஆண்டு கால நண்பன் விஷ்ணுவர்த்தன் மறைந்தது தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு என்றார் நடிகர் ரஜினிகாந்த்.

பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் கடந்த புதன்கிழமை அதிகாலை மைசூரில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் விஷ்ணுவர்தன். எனவே அவர் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்று பெங்களூர் செல்லவில்லை.

இந் நிலையில் நேற்று பெங்களூரில் உள்ள விஷ்ணுவர்தன் வீட்டுக்கு மனைவி லதாவுடன் வந்தார் ரஜினி. பிரபல கன்னட நடிகர் அம்பரீஷும், கன்னட பட அதிபர் ராக்லைன் வெங்கடேசும் அவர்களுடன் வந்திருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய ரஜினி, எனக்கும் விஷ்ணுவுக்குமான நட்பை விவரிக்க முடியாது. அது ஆத்மார்த்தமானது.

என் வாழ்க்கையில் விஷ்ணுவுக்கு மிக முக்கிய இடம் உண்டு. சிக்கலான நேரங்களில் எனக்கு ஆலோசனை சொல்வார். அவரது இறுதி நேரச் சங்குகளின் போது நான் வரமுடியாவில் போய்விட்டது. அதற்காக மிகவும் வருந்துகிறேன்.

ஆரம்ப நாட்களில் ஒருமுறை எனக்கு தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் வாய்ப்பு வந்தது. ஏதை ஏற்பது என்று தெரியவில்லை. குழப்பமான நிலை. அன்றைக்கு விஷ்ணுவர்தன்தான் எனக்கு யோசனை சொன்னார். "நீ தமிழ் வாய்ப்பை சரியா பயன்படுத்து. அங்கு நல்லபடியா ஒரு பெரிய நிலைக்கு வரணும், சாதிக்கணும்" என்றார். நான் இன்னைக்கு இந்த அளவு வந்திருக்கேன்னா, அதற்கு விஷ்ணுவும் ஒரு காரணம்.

எனது 100வது படமான ஸ்ரீராகவேந்திரரில் அவர் நடித்தது எனக்குப் பெருமை. அவரது மறைவு அவரது ரசிகர்களுக்கும் எனக்கும் பேரிழப்பு. தனிப்பட்ட முறையில் எனக்கு வார்த்தைகளால் சொல்ல முடியாத இழப்பு என்றார்.

முன்னதாக, பெங்களூர் ஜெயநகரில் உள்ள அம்பரீஷ் வீட்டுக்கு ரஜினி சென்றார். அவர் வந்திருப்பதை அறிந்து அங்கு ஏராளமான மக்கள் திரண்டுவிட்டனர். இதனால் அம்பரீஷ் வீட்டுக்கு அருகில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

பின்னர் அம்பரீசுடன் ரஜினி விஷ்ணுவர்தன் வீட்டுக்குச் சென்றார். அங்கும் திரளான ரசிகர்கள் கூடிவிட்டதால் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Comments

Most Recent