இடைக்காலத் தடை... பொங்கலுக்கு வருமா ஆயிரத்தில் ஒருவன்?



மிகுந்த சிக்கல்களைச் சந்தித்து, ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீஸாகவிருந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை வாங்கியுள்ளார் சேலம் சந்திரசேகரன் என்ற தயாரிப்பாளர்.

சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் சந்திரசேகரன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், "சினிமா இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 'காசிமேடு' என்ற தமிழ் படத்தை தயாரிக்க முடிவு செய்தேன்.

இதற்காக எங்கள் 2 பேருக்கும் இடையே 27.10.04 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த படத்தின் உரிமையை பெறுவதற்காக ரூ.2 கோடி தருவதாக செல்வராகவனிடம் நான் சம்மதித்து இருந்தேன்.

பின்னர் ரூ.90 லட்சம் தொகையை 2004-ம் ஆண்டு அக்டோபரில் இருந்து 2005-ம் ஆண்டு மே மாதம் வரை 5 தவணைகளில் வழங்கினேன். இந்த நிலையில் கஜினி என்ற வெற்றிப் படத்தையும் தயாரித்தேன்.

காசிமேடு படத்தை இயக்கும் ஒப்பந்தத்தை செயல்படுத்தாமல் என்னை செல்வராகவன் ஏமாற்றி வந்தார். புதுப்பேட்டை படத்தில் 'பிசி'யாக இருப்பதாகக் காரணம் கூறி என்னை புறக்கணித்தார்.

இந்த நிலையில் டிரீம்வேலி கார்பரேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.ரவீந்திரனுடன் செல்வராகவன் ஒப்பந்தம் செய்துகொண்டு ஆயிரத்தில் ஒருவன் என்ற சினிமாவை தயாரிக்கும் வேலையில் இறங்கினார்.

இது எனக்குத் தெரியாது. எனது அனுமதியையும் செல்வராகவன் பெறவில்லை. எனவே காசிமேடு படத்தை தயாரிக்க வேண்டும், இல்லாவிட்டால் எனது பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்று கூறினேன்.

என்னுடன் செல்வராகவன் ஒப்பந்தம் செய்திருக்கும் போது, அவரை ரவீந்திரன் எப்படி மற்றொரு ஒப்பந்தத்தில் சேர்க்க முடியும்? என்று தமிழ்ப் பட தயாரிப்பாளர் கவுன்சிலில் பிரச்சினையைக் கொண்டு வந்தேன்.

அவர்கள் விசாரித்து, 2006-ம் ஆண்டு ஜுன் மாதத்துக்குள் ரூ.2 கோடியை எனக்கு அவர்கள் கொடுக்க வேண்டும் என்று கூறினர். நான் கடனாக வாங்கிய ரூ.50 லட்சம், பைனான்சியர் ரமேஷ்பாபுவிடம் 'அட்ஜஸ்ட்' செய்யப்பட்டது. மீதி ரூ.1.10 கோடியை தந்திருக்க வேண்டும்.

செல்வராகவனும், ரவீந்திரனும் எனக்கு முதலில் ரூ.10 லட்சமும், பின்னர் ரூ.30 லட்சமும் (2007-ம் ஆண்டு) கொடுத்தனர். மீதமுள்ள தொகை ரூ.1.10 கோடியை ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியிடும் போது தருவதாகக் கூறினர். இரண்டரை ஆண்டுகள் தயாரிக்கப்பட்ட அந்தப் படம் தற்போது பொங்கலன்று வெளியிடப்பட உள்ளது.

எனவே மீதத் தொகையை தரும்படி கேட்டேன். ஆனால் ஏதோ காரணத்தைக் கூறி மீண்டும் ஏமாற்றிவிட்டு, படத்தை வெளியிடத் திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் படத்தை ரிலீஸ் செய்தால் எனக்கு பணம் வராமல் போய், பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே ரவீந்திரன் தயாரித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்", என்றார்.

இந்த மனுவை 2-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி விசாரித்தார். ஆயிரத்தில் ஒருவன் படத்தை 20-ந் தேதி வரை திரையிட இடைக்காலத் தடை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்தப் படம் வரும் 14-ம் தேதி உலகெங்கும் ரிலீஸ் என தியேட்டர் விவரங்களுடன் விளம்பரங்கள் வெளியாகியுள்ள நிலையில், சந்திரசேகரனின் இந்த வழக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஆயிரத்தில் ஒருவன் தயாரிப்பாளர் கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்.

Comments

Most Recent