குட்டி... படு கெட்டி!!



தெலுங்கில் வெற்றிப் பெற்ற ஆர்யா படத்தை தனுஷை வைத்து ரீமேக்குகிறார்கள் என்ற செய்தி கசிந்த உடனே, கோடம்பாக்கம் வட்டாரத்தில் இப்படிச் சொன்னார்கள்: "படம் க்ளீன் ஹிட்டாகிடும்..."

அதை அப்படியே நிரூபித்திருக்கிறார் இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர்.

இந்தப் பொங்கலுக்கு ரிலீசான படங்களில் நல்ல பொழுதுபோக்குப் படம் என்ற இமேஜையும், குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம் என்ற நல்ல பெயரையும் தக்கவைத்துக் கொண்டதில் குட்டி முதல் ரவுண்டிலேயே ஹிட் முத்திரையோடு முன்னணியில் நிற்கிறது.

படத்தில் தனுஷ் கொஞ்சம் ஓவராகப் பேசுவதாகத் தெரிந்தாலும், கதை, காட்சி அமைப்பு என பலவற்றில் ஸ்கோர் செய்துவிட்டது இந்தப் படம்.

பொங்கலுக்கு வெளியான மற்ற படங்களில் ஆயிரத்தில் ஒருவன் பற்றி கலவையான விமர்சனங்கள். ஆனால் கவலை தரும் விஷயம், சத்யம் தவிர பிற திரையரங்குகளில் இப்போது போனாலும் ஈஸியாக டிக்கெட் கிடைக்கும் நிலைதான்.

குறிப்பாக பி அண்ட் சி பகுதிகளில் பொங்கல் விடுமுறையான சனிக்கிழமையே கூட்டமில்லை. வார நாளான இன்று எப்படி இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

நாணயம் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் இல்லை என்றாலும், ஒரு நல்ல பொழுதுபோக்குப் படமாக ஜெயிக்கத் தவறிவிட்டது உண்மையே. இந்தப் படத்தில் மட்டுமல்ல, படத்தின் கதைக்கும் மிகப் பெரிய வில்லன் எஸ்பி பாலசுப்பிரமணியம் என்பதை படம் பார்த்தவர்கள் கன்னா பின்னாவென்று திட்டுவதிலிருந்தே தெரிகிறது.

போர்க்களம் படத்தை பெரிய 'boreகளம்' என ஒரே பஞ்சில் வீழ்த்தியிருக்கிறார்கள் ரசிகர்கள்.

ஆக, தனுஷ் நினைத்தது போலவே அவரது அண்ணன் செல்வராகவன் படத்தை வீழ்த்தி முதலிடத்தில் நிற்கிறது குட்டி!.

Comments

Most Recent