சிகரெட் விளம்பர நிகழ்ச்சி: விஜய் ஆன்டனிக்கு நோட்டீஸ்'அடுத்த இசைபுயல் நீங்களா?' என்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி உட்பட பாடகர்களுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசின் கண்காணிப்புக் குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் `போர் ஸ்கொயர்' சிகரெட்டை விளம்பரப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,

'சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

சென்னை நகரில் பல இடங்களில் 'போர் ஸ்கொயர்-கெட் ஃபேமஸ், தமிழ்நாட்டின் அடுத்த இசைப்புயல் நீங்களா?' என்ற விளம்பரம் பல கடைகளில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சிக்காக நுழைவுச்சீட்டுகளும் `போர் ஸ்கொயர்' சிகரெட் நிறுவனத்தினரால் இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது என புகார் வந்தது.

மாநில புகையிலை கட்டுப்பாட்டு அலுவலர்கள் ஆய்வு செய்ததில், கடந்த ஜனவரி மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னை கோடம்பாக்கம் பத்மராம் மஹால், தியாகராய நகர் விஜயமஹால் ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது தெரியவந்தது.

இசை நிகழ்ச்சியில் திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, பாடகர் கார்த்திக், பாடகி சுசித்ரா ஆகியோர் கலந்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இது போன்ற நிகழ்ச்சிகள் வருகிற 23ம் தேதி மற்றும் 24ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் பாடகர் ரஞ்சித், பாடகி மாதங்கி ஆகியோர் கலந்து கொள்ள போவதாகவும் தெரிகிறது.

சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் தடைச்சட்டம் 2003 பிரிவு 5ன் கீழ் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது தவறு.

எனவே சம்பந்தப்பட்ட காட் பிரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு இந்த இசை நிகழ்ச்சிகளை நிறுத்தகோரி சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

காவல் துறையிடமும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 10ம் தேதி நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் மற்றும் பாடகர்களுக்கும், நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டவகர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையும் மீறி மேற்படி காட் பிரே பிலிம்ஸ் இந்தியா நிறுவனம் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தினால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.

Comments

Most Recent