சக ஹீரோக்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்வேன்- சரோஜாதேவி



என்னுடன் நடிக்கும் கதாநாயக நடிகர்களின் நடிப்பை உற்றுநோக்கி கவனித்துக் கொண்டிருப்பேன். அதேபோல் திறமையாக நடிக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை பார்த்து நிறைய கற்றுக் கொள்வேன்' என்று நடிகை சரோஜா தேவி கூறினார்.

பழம்பெரும் நடிகை சரோஜாதேவியை பாராட்டி கர்நாடக கலாக்ஷேத்ரா அகாடமி சார்பில் பெங்களூரில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் அகாடமியின் தலைவர் நாகாபரணா, நடிகை ஜெயமாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாராட்டு விழாவில் நடிகை சரோஜாதேவி கூறியதாவது:

நான் நடிக்க தொடங்கிய காலத்தில் சிபாரிசு எதுவும் கிடையாது. திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அதுபோல எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நான் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும்போது, எனது நடிப்பை பார்த்து மற்ற படங்களுக்கு தேர்வு செய்தனர். சிபாரிசு எதுவும் எனக்கு கிடையாது. தெலுங்கில் என்னை என்.டி.ராமாராவ் அறிமுகம் செய்தார். இந்தியில் திலிப்குமார் எனது குரு.

நான் நடிக்க தொடங்கிய காலத்தில் ஒரு சில படங்களில் நடித்து விட்டு மீண்டும் பெங்களூருக்கு திரும்பலாம் என நினைப்பேன். இங்கு நிறைய படித்து சாதிக்க வேண்டும் என விரும்பினேன்.

இதுபற்றி எனது தாயாரிடமும் கூறினேன். அப்போது எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. எனது தாயார் தொடர்ந்து படங்களில் நடிக்கும் படி கூறினார்.

படங்களில் நடிப்பதன் மூலம் நல்ல பெயர் கிடைக்கும் என்றும் கூறினார். எனது தாயார் சொல்படியே சினிமாவில் நுழைந்து நடித்தேன். இதனால் நல்ல நிலையில் இருக்கிறேன்.

இந்த நேரத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர்களுக்கும், திரைப்படத்துறையை சேர்ந்த அனைத்து பிரிவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படப்பிடிப்பின்போது, என்னுடன் நடிக்கும் கதாநாயக நடிகர்களின் நடிப்பை உற்றுநோக்கி கவனித்துக் கொண்டிருப்பேன். அதேபோல் திறமையாக நடிக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை பார்த்து நிறைய கற்றுக் கொள்வேன். அதனால் படப்பிடிப்பு முடியும் வரை அங்கேயே இருப்பேன்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், ராஜ்குமார், திலிப்குமார் போன்ற பெரிய நடிகர்களுடன் நான் நடித்து உள்ளேன். அப்போது எல்லாம் டப்பிங் கிடையாது. படங்களில் நடிக்கும்போது, சொந்த குரலில்தான் பேச வேண்டும்.

அதற்காக மொழிகளை கற்றுக்கொண்டேன். நான் நடிக்கும் காலத்தில் மற்ற யாருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது கிடையாது. அனைவரிடமும் அன்பும், மரியாதையுமே கிடைத்தது.

எனது தாயாரின் பேச்சை நான் ஒருபோதும் மீறியது கிடையாது. அவரது பேச்சை கேட்டு அதன்படியே நடந்து வந்தேன்.

எனக்கு திருமணம் ஆனபிறகு கணவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். சினிமாவே எனக்கு கடவுள். தொடர்ந்து நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பேன் என்றார்.

Comments

Most Recent