ஜேபிஜே மோசடி: மீனா-விஜயகுமாரிடம் விசாரணை?



ஜேபிஜே என்ற மோசடி நிறுவனம் மூலம் கோடி கோடியாய் சுருட்டி இப்போது கர்நாடகாவில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் தேவதாஸ் பற்றி ஏராளமாய் தகவல்களை அள்ளிக் கொட்டுகிறார்கள், அவரிடம் முன்பு வேலை செய்தவர்கள்.

இந்த நபர் வேறு பினாமி நிறுவனங்களின் பெயர்களிலும் மக்களை ஏமாற்றியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரிடம் முன்பு மேலாளர்களாகப் பணியாற்றி, பாதியில் ஓடிவந்த நான்கு பேர் இதுபற்றி போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், திருவாலங்காடு போன்ற பகுதிகளில் ஒரு கொள்ளைக் கூட்டம் போலவே இந்த நிறுவனத்தின் ஆட்கள் சுற்றிக் கொண்டிருப்பார்களாம் (இப்போது இவர்கள் அனைவருமே தலைமறைவாகியுள்ளனர்).

ஒருபடத்தில் வடிவேலுவை துரத்தித் துரத்தி வேனுக்குள் ஏற்றி கிட்னியைத் திருடுவார்களே... கிட்டத்தட்ட அதே ஸ்டைலில்தான் இவர்கள் பல வாடிக்கையாளர்களைப் பிடித்து அவர்களிடம் தேவதாஸின் அருமை பெருமைகளையும், அவருக்கும் சினிமாவின் 'ஆணி பிடுங்கிகளுக்கும்' இடையே உள்ள நெருக்கத்தையும் விவரித்து வளைத்துள்ளனர்.

இவர்களில் முக்கியமானவர் கலைக்குடும்ப தலைவர் விஜயகுமார்.

இவர்தான் தேவதாசுக்கு வீ்ட்டுமனைத் திலகம் என்று பட்டமும் மலர் கிரீடமும் சூட்டியவராம்.

அதுமட்டுமல்ல, விஜயகுமார் மூலமாக, சினிமா ஸ்டன்ட் நடிகர்கள், நடிகைகளை வரவழைத்து நிகழ்ச்சிகளின் போது பந்தா காட்டுவாராம் தேவதாஸ்.

குட்டி விமானத்தில் இவர் வந்திறங்க, இந்த சினிமா ஸ்டன்ட் கலைஞர்கள் செக்யூரிட்டிகள் போல வருவார்களாம். துணை நடிகைகள் நிறுவனத்தின் ஊழியர்களாக மாறி வாடிக்கையாளர்களை திக்கு முக்காட வைப்பார்களாம், உபசரிப்பில்.

வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பிரமாண்ட விழா உள்பட பல நிகழ்ச்சிகளில் விஜயகுமாரையும் சேர்த்தே பார்த்ததால் இந்த நிறுவனத்தில் அவரும் ஒரு பார்ட்னர் என்றே நினைத்து ஏமாந்துவிட்டோம் என்று கூறியுள்ளனர் ஏமாந்த வாடிக்கையாளர்கள்.

'நடிகர் விஜயகுமார் விளம்பரத்தில் கொடுத்த வாக்குறுதியை நம்பியே வீட்டுமனை திட்டத்தில் முதலீடு செய்தோம். எனவே அவரையும் பிடித்து விசாரிக்க வேண்டும்.

விளம்பரம்தான் என்றாலும், 'ஜேபிஜேக்கு நான் கியாரண்டி' என மீனாவும் விஜயகுமாரும் உறுதியாகச் சொன்னார்கள். அவரையும் விசாரிக்க வேண்டும். இது போன்ற மோசடி நிறுவன விளம்பரத்தில் தோன்றி மக்களை ஏமாற்றும் நடிகர் -நடிகைகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

நடிகை மீனா மற்றும் நடிகர் விஜயகுமாரிடம் கட்டாயம் விசாரணை நடத்துவோம் என்று போலீசார் வாக்குறுதி அளித்ததுடன், அவர்களை விசாரிக்க தனி அதிகாரிகளையும் நியமித்துள்ளார்களாம்.

Comments

Most Recent