கத்தியால் குத்தி கொள்ளை: ரத்தம் சொட்ட திருடர்களை துரத்தி பிடித்த நடிகைசென்னை: நடிகையை கத்தியால் குத்தி, நகை, பணத்தைக் கொள்ளையடித்துள்ளது ஒரு துணிகரக் கும்பல்.

விபச்சார தடுப்புப் பிரிவு போலீஸார் என்று கூறி அவரிடம் நகை, பணத்தைப் பறித்த அக்கும்பலை நடிகை கையில் ரத்தம் சொட்டச் சொட்ட ஆட்டோவில் துரத்த, மறு முனையில் விரைந்து வந்த போலீஸார் திருடனை மடக்கிப் பிடித்தனர்.

சென்னை வடபழனியில் வசிக்கும் ரயில்வே ஊழியர் வசந்த்-ஆஷா. தம்பதியின் மகளான நிவேதா (21) ஒரு நடிகை ஆவார். கிள்ளாதே என்ற படத்தில் 2வது கதாநாயகியாக நடித்துள்ளார்.

வசந்த் சபரிமலைக்கு சென்றுள்ளார். இந் நிலையில் நேற்று பிற்பகலில் 4 பேர் தங்களை விபச்சாரத் தடுப்புப் போலீஸார் என்று கூறிக் கொண்டு நிவேதாவின் வீட்டுக்கு வந்தனர்.

இங்கு விபசாரம் நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்றும், சோதனைபோட வந்தோம் என்றும் கூறவே அதிர்ந்து போன நிவேதாவும் தாயாரும், இங்கு விபசாரம் எதுவும் நடக்கவில்லை. தப்பான முகவரிக்கு வந்துவிட்டீர்கள் என்றும் ஆவேசமாக கூறியுள்ளனர்.

ஆனால், வீட்டை சோதனை போடுகிறோம் என்று கூறிக் கொண்டு வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்தனர். 2 பேர் மட்டும் வெளியில் நின்று கொள்ள, 2 பேர் உள்ளே நுழைந்து, சோதனை போடுவதுபோல் நடித்தனர்.

பின்னர், திடீரென்று நிவேதாவின் கழுத்தில் கத்தியை வைத்து நகை, பணத்தை கொடுக்குமாறு மிரட்டினர்.

அவர்களிடமிருந்து நிவேதா தப்ப முயன்று போராடியபோது கையில் கத்தியால் குத்தியுள்ளனர். இதனால் அவரது கையில் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டியது.

பின்னர், நிவேதாவும், அவரது தாயாரும் அணிந்திருந்த 2 செயின்கள், 2 மோதிரங்கள், பிரேஸ்லெட் உள்பட 12 பவுன் நகைகளை பறித்த அக் கும்பல் பீரோவில் இருந்த ரூ.20,000 பணத்தையும் எடுத்துக் கொண்டு வெளியில் நின்றிருந்த 2 பேருடன் பைக்கில் ஏறித் தப்பினர்.

வெளியே ஓடி வந்த நிவேதா, உதவி கோரி குரல் தந்தபடி அங்கு வந்த ஒரு ஆட்டோவில் ஏறி பைக்குகளைத் துரத்தினார்.

செல்போன் மூலம் போலீஸாருக்கும் தகவல் தந்தார்.

100 அடி சாலையில் சினிமா பாணியில் நடிகை ஆட்டோவில் துரத்த, நெற்குன்றம் ரோடு சந்திப்பு சிக்னலில் வைத்து கொள்ளையன் ஒருவனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். 3 பேர் தப்பிவிட்டனர்.

பிடிபட்டவனின் பெயர் ராஜேஷ். 27 வயதான அவன் அரும்பாக்கத்தைச் சேர்ந்தவன். அவன் தந்த தகவலின்பேரில் சுரேஷன் என்பவனும் சிக்கினான்.

சுரேஷிடமிருந்து நிவேதாவிடம் கொள்ளையடித்த 10 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும், 2 சவரன் நகைகளுடனும், ரூ.20,000 பணத்துடனும் ராதாகிருஷ்ணன், ரமேஷ் என்ற 2 கொள்ளையர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

திருடர்கள் கத்தியால் குத்தியபோதிலும் பயப்படாமல் ரத்தம் சொட்டச் சொட்ட ஆட்டோவில் விரட்டிச் சென்று அவர்கள் பிடிபட உதவிய நிவேதாவை போலீஸார் வெகுவாகப் பாராட்டினர்.

Comments

Most Recent