'நெட்டில்' ஜக்குபாய்.. பார்க்க ஆளில்லை!!



சரத்குமார் நடித்த ஜக்குபாய் திரைப்படம் இன்டர்நெட்டில் முழுசாக வெளியாகிவிட்டது. விஷயம் அறிந்து ஆடிப் போயுள்ளார் சரத்.

இதைவிட அவரை அதிர வைத்திருப்பது, இலவசமாக வெளியாகியுள்ள இந்தப் படத்தை மிகக் குறைந்த அளவிலான ரசிகர்கள்தான் இன்டர்நெட்டிலேயே பார்த்துள்ளார்கள் என்ற உண்மை!

சரத்குமார் - ஸ்ரேயா நடிப்பில், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜக்குபாய் படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தார் சரத் குமார். ஆனால் படத்தின் பிஸினஸ் முழுவதுமாக முடியாத நிலையில் படத்தை வெளியிடுவது குறித்து எந்த முடிவுக்கும் வராமல் உள்ளார் சரத் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சரத்குமாரின் இந்தப் படம் இணையதளங்களில் முழுமையாக வெளியாகி விட்டது. பின்னணி இசை சேர்ப்புக்கு முந்தைய நிலையில் படம் இருந்தபோது யாரோ இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். இதனால் வெறும் வசனங்கள் மற்றும் காட்சிகள் மட்டுமே இணையத்தில் பார்க்க முடிகிறது. அதாவது குறைப் பிரவசத்தில் பிறந்த குழந்தை போல ஜக்குபாய் நெட்டில் உலா வந்து கொண்டுள்ளது.

சரத் குமாரைப் பொறுத்தவரை, இந்தப் படம் மட்டுமே அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை. இன்னும் வெளிவராத இந்தப் புதுப்படம் இணையத்தில் வெளியானது அவருக்கு அதிர்ச்சி தந்துள்ளது.

இதைவிட கொடுமை, இந்தப் படத்துக்கு பார்வையாளர்கள் மிக மிகக் குறைவாக இருந்ததுதானாம். இணையத்தில் இலவசமாக வெளியாகியும் பார்க்க ஆளில்லை என்றால் மனசு கஷ்டமாகத்தானே இருக்கும்!

இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளார் சரத்.

சென்னையில் ரெய்டு...

ஜக்குபாய் படத்தை லேப்பில் இருந்து திருடி மர்ம கும்பல் ஒன்று சி.டி.யாக பதிவு செய்து பர்மா பஜார் வியாபாரிகளிடம் விற்று விட்டதாகவும் அதை வைத்து பஜாரில் உள்ளவர்கள் ஆயிரக்கணக்கில் சி.டி. யாக தயாரித்து, விற்பனைக்கு விட தயாராக வைத்திருப்பதாகவும் நடிகர் சங்க தலைவர் சரத்குமாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

உடனடியாக இது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் சரத்குமார் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து திருட்டு சி.டி. கும்பலை சுற்றி வளைக்கும்படி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து நேற்று இரவோடு இரவாக திருட்டு சி.டி. தயாரிப்பின் புகலிடமாக விளங்க கூடிய வட சென்னையில் முக்கிய பகுதிகளை 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்தனர்.

குடிசை தொழில் போல் திருட்டு சி.டி. பதிவு செய்யும் முக்கிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் சென்று சோதனை செய்தனர்.

இதில் ஜக்குபாய் படத்தின் 50 ஆயிரம் சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பர்மா பஜாரில் உள்ள ஏராளமான கடைகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். அங்கும் சமீபத்தில் வெளியான பது படங்களின் சி.டி.க்கள் சிக்கியது.

இது தொடர்பாக 5 பேரை முதற்கட்டமாக போலீசார் கைது செய்துள்ளனர்.


Comments

Most Recent