அமிதாப் தலைமை... கமல் நாடகம்: கருணாநிதிக்கு பிரமாண்ட விழா



வீடு, நிலம் இன்னபிற சலுகைகளை சினிமாக்காரர்களுக்கு வாரிக் கொடுத்து வரும் முதல்வருக்கு மீண்டும் ஒரு பாராட்டு விழா நடத்துகிறார்கள் சினிமா கலைஞர்கள்.

இந்த விழாவில் கமல்ஹாஸன் நடத்தும் சிறப்பு நாடகம் ஒன்று நடக்க உள்ளதாம்.

திரைப்பட தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்-நடிகைகள், சின்னத்திரை தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீடு கட்டிக் கொள்ள, சென்னையை அடுத்த பையனூரில், 116 ஏக்கர் நிலத்தை முதல்வர் கருணாநிதி வழங்கியுள்ளார்.

அந்த இடத்தில் அமைய இருக்கும் குடியிருப்புகளுக்கு, 'கலைஞர் திரைப்பட நகரம்' என்று பெயர் சூட்ட, திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.

அத்துடன், தங்களுக்கு சலுகை மேல் சலுகையாக அள்ளி வீசி வரும் முதல்வருக்கு மீண்டும் ஒரு பிரமாண்ட பாராட்டு விழா நடத்தவும் தீர்மானித்துள்ளனர்.

வழக்கம்போல இந்த விழாவும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்தான் நடக்கிறது.

குத்தாட்டம், கவர்ச்சியாட்டம், கலைநிகழ்ச்சிகள், காமெடி ஷோ என கிட்டத்தட்ட 6 மணி நேரத்துக்கு மேல் நடக்க உள்ள இந்த விழாவில் நடிகர் கமல் ஹாஸன் சிறப்பு நாடகம் நடத்தி கருணாநிதியைப் பாராட்டுகிறார்.

இந்த நாடகத்தில் கமல்ஹாசனுடன் மேலும் சில நடிகர்-நடிகைகளும் நடிக்கிறார்களாம். இவர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

முதல்வர் கருணாநிதி பற்றி கவிஞர் வாலி ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அந்த பாடலுக்கு, ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். வாலி எழுதி, ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்த அந்த பாடல், மேடையில் பாடப்படுகிறது.

பாராட்டு விழாவுக்கு தலைமை தாங்குவதற்கு, பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவரும் ஒப்புக் கொண்டுள்ளார் என்பது லேட்ஸ்ட் செய்தி!.

Comments

Most Recent