திரையுலகில் ஒற்றுமை இருந்தால் திருட்டு வி.சி.டி. ஒழியும்: ரஜினி


சென்னை, ஜன. 5: திரையுலகைச் சேர்ந்த நமக்குள் ஒற்றுமை இருந்தால் திருட்டு வி.சி.டி.க்களை ஒழிக்கலாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்க சரத்குமார், ஸ்ரேயா நடித்துள்ள படம் "ஜக்குபாய்'. ஜனவரி மாத இறுதியில் வெளியாகவிருந்த சூழ்நிலையில் இந்தப் படத்தின் திருட்டு வி.சி.டி, மற்றும் டி.வி.டி.க்கள் விற்பனையாகின. இதையடுத்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.
இந்த விவகாரம் குறித்தும், இனி திருட்டு வி.சி.டி.க்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது:
ஜக்குபாய் படத்தின் திருட்டு வி.சி.டி.க்கள் வெளியானது குறித்து சரத்குமாரும் ராதிகாவும் என்னிடம் வருத்தத்தோடு தெரிவித்தனர். பொதுவாக ரசிகர்களும் பொதுமக்களும் நல்ல படங்களுக்கு எப்போதும் ஆதரவளிப்பார்கள். மோசமான படங்களைப் பார்க்க மாட்டார்கள். பத்திரிகையாளர்களும் படம் நன்றாக இருந்தால்தான் நல்லபடியாக விமர்சனம் செய்வார்கள்; இல்லாவிட்டால் எழுத மாட்டார்கள்.
"ஜக்குபாய்' படத்தைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். இந்தப் படத்தை ரசிகர்கள் ஆதரிப்பார்கள். இதில் நான்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்த "டைட்டில்' வைத்ததிலிருந்தே ஏதோ ஒரு தடங்கல் ஏற்பட்டுக்கொண்டு இருந்தது. படத்தை அறிவித்து 3 மாதங்கள் ஆகியும் ஒன்றும் நடக்கவில்லை. என்னுடைய படத்துக்கு இப்படி நடக்காது. அதனால் இந்தப் படம் வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
இந்தப் படம் பெரிய அளவில் ஹிட் ஆகும். இந்த நேரத்தில் சரத்குமாரும் ராதிகாவும் கலங்கக் கூடாது; தைரியமாக இருக்க வேண்டும். இதையே பெரிய விளம்பரமாக எடுத்துக்கொள்ளுங்கள். 10 கோடி ரூபாய் கொடுத்தாலும் படத்துக்கு இந்த விளம்பரம் கிடைக்காது.
ஒற்றுமை வேண்டும்: திருட்டு வி.சி.டி.க்கள் வருவதற்கு யார் காரணம்? எப்படி வருகிறது? எங்கிருந்து வருகிறது? நம் ஆட்கள்தான் (சினிமாக்காரர்கள்) இந்தத் தவறை செய்கிறார்கள். நமக்குள் ஒற்றுமை இருந்தால் திருட்டு வி.சி.டி.யை ஒழிக்கலாம்.
தியேட்டர்களிலிருந்து திருட்டு வி.சி.டி. வந்தால் அந்தத் தியேட்டருக்கு இனி படங்களையே தராதீர்கள்; விநியோகஸ்தர்கள் மூலம் வந்தால் அவர்களை ஒதுக்கித் தள்ளுங்கள்.
அரசை எதிர்பார்ப்பதா? நமது பொருளை முச்சந்தியில் வைத்துவிட்டு முதல்வரிடமும் போலீசாரிடமும் சென்று காப்பாற்றுங்கள் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. நமது பொருளை நாம்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அரசும் முதல்வரும் எவ்வளவோ செய்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் அரசுதான் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது.
திருட்டு வி.சி.டி. விற்பவர்களை எங்களது (கமல், ரஜினி) ரசிகர்களை ஏவி அடிக்க வேண்டும் என கூறுவது சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும். அது தவறு.
எனவே இந்தப் பிரச்னையில் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு நல்ல முடிவை எடுப்போம் என்றார்.

Comments

Most Recent