நடிகை குஷ்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு


புது தில்லி, ஜன. 19: திருமணத்துக்கு முன்பாக பாலுறவு கொள்வது பற்றி நடிகை குஷ்பு கடந்த 2005}ல் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த பேட்டி தொடர்பான முழு விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி குஷ்புவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஷ்பு அளித்த அந்த பேட்டிக்கு தமிழகம் முழுவதும் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக தமிழத்தில் 23 இடங்களில் அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்குகளை ஒன்றாகச் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக நடிகை குஷ்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் மேட்டூரை சேர்ந்த முருகன் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பஞ்சால் மற்றும் சவுகான் ஆகியோர் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

குஷ்பூ தரப்பில் வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் வாதாடினார்.

"குஷ்புவின் அறிக்கை வரம்பிற்கு அப்பாற்பட்டது. அதை ஏற்க முடியாது. அவர் அளித்த பேட்டியின் முழு விவரத்தை இரண்டு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments

Most Recent