திருட்டு விசிடி வைத்திருப்போரிடமிருந்து படத் தயாரிப்புச் செலவை வசூலிக்க டைரக்டர் கோரிக்கை!

திருட்டு விசிடி வைத்திருப்போரிடமிருந்து அவர் வைத்திருக்கும் படத்தின் தயாரிப்புச் செலவை மொத்தமாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஒரு இயக்குநர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த இயக்குநரின் பெயர் ஹாளிது. இவர் மாற்றிக் காட்டுவோம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இது வெளிவரவுள்ளது.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் இன்று அவர் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், செய்யாங்குப்பம் சினி ஆர்ட்ஸ், ஜே.எஸ்.பி.எஸ். இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ள மாற்றிக் காட்டுவோம் திரைப்படத்தில் 125-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர். குறைந்த முதலீட்டில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் வீடியோ உரிமம் கொடுக்கப்படுவதற்கு முன்னால், திருட்டு சி.டி. யார் கையில் இருந்தாலும் அவர்களிடம் இருந்து சினிமா படத்தின் முழு செலவு தொகையும் வசூலிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கையால் எதிர்காலத்தில் திருட்டு சி.டி. வாங்கும் தன்மையும், குற்றவாளிகளின் எண்ணிக்கையும் குறையும். தியேட்டர்களில் கூட்டம் அதிகரிக்கும்.

கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்யும் இந்த மாஸ் மீடியா, நஷ்டத்துக்கு செல்லும் நிலையில் மாற்றம் ஏற்படும் என்று கோரியுள்ளார்.

Comments

Most Recent