நடிகை கனகாவுக்கு திருமணமே ஆகவில்லை


நடிகை கனகாவுக்கு திருமணமே ஆகவில்லை. மன அழுத்தம் காரணமாக, அவர் பொய் சொல்கிறார் என்று அவருடைய தந்தை தேவதாஸ் கூறினார்.
நடிகை கனகா, லாஸ் ஏஞ்சல்சில் மெக்கானிகல் என்ஜினீயராக இருந்த முத்துக்குமார் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணமான 15வது நாள் அவர் காணாமல் போய்விட்டதாகவும் திடீர் பேட்டி அளித்தார்.
தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருவதாகவும், தன் கணவர் காணாமல் போனதில் ஆவி அமுதாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுவதாகவும் அந்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
அதாவது கணவர் காணாமல் போய் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புகாரை மீடியாவுக்கு தெரிவித்துள்ளார் கனகா. இந்த விவகாரத்தில் கனகாவின் தந்தை தேவதாஸ் பெயரும் அடிபடுகிறது.
எனவே கனகாவின் தந்தை தேவதாஸ் நிருபர்களைச் சந்தித்தார். அவர் கூறியது:
கனகாவுக்கு பதிமூன்று வயதாகும்போது, நான் அவளுடைய தாயார் தேவிகாவை விட்டுப் பிரிந்து வந்துவிட்டேன். அதன்பிறகு அவர்கள் இருவரையும் நான் பார்க்கவே இல்லை. 18 வருடங்கள் கழித்துதான் கனகாவைச் சந்தித்துப் பேசினேன்.
‘உனக்கு திருமண வயதாகி விட்டது. திருமணம் செய்துகொள’ என்று கூறினேன். ஒரு பெண் தாய்மை அடைந்தால்தான் அவள் வாழ்க்கை முழுமையடையும். நீ தாயானால்தான் நான் தாத்தா ஆக முடியும்’ என்றெல்லாம் பேசினேன். பிறகுதான் திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதித்தாள். என்னையே மாப்பிள்ளை பார்க்கச் சொன்னாள்.
இது, நடந்தது 2008ம் ஆண்டு. ஆனால், 2007ம் ஆண்டே தனக்கு திருமணம் நடந்துவிட்டதாக இப்போது கூறுகிறாள். திருமண ஆல்பம் எங்கே? என்று கேட்டால், இதுதான் என்று ஒரு கிழிந்த பேப்பரை காட்டுகிறாள். அதில்,எந்த உருவமும் இல்லை. இதிலிருந்து கனகா, மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறாள என்று புரிந்தது.
ஒரு தந்தை என்ற முறையில் அவள் மீது அனுதாபப்பட்டு, ‘நீ என்னுடன் வந்துவிடு. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றேன். உடனே, ‘எங்க அம்மா மரணத்துக்கு நீதான் காரணம்.. சொத்தை அபகரிக்கப் பார்க்கிறாய்’ என்று வெறி பிடித்தவள் கூச்சலிடுகிறாள். என்னை அவள் பேசவே விடவில்லை. அவள் பேசியதை எல்லாம் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
2007ம் ஆண்டு திருமணம் நடந்திருப்பதாக கனகா கூறுகிறாள். அதில் ஒருவேளை உண்மை இருக்குமோ என்று ஒவ்வொரு திருமணப் பதிவு அலுவலகமாக சென்று ஆதாரங்களை தேடினேன். எந்த பதிவு அலுவலகத்திலும் கனகா திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரம் இல்லை. கற்பனையாக ஒரு கணவரை உருவாக்கிக் கொண்டு, மன அழுத்தம் காரணமாக கனகா பொய் சொல்கிறாள்.
கணவர் காணவில்லை என்றால் நியாயமாக போலீசுக்கு போயிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை அவர். இதில் பெரிய மர்மம் இருக்கிறது.
அவளுக்கு என்ன ஆகுமோ என்று நினைக்கும்போது பயமாகவும், கவலையாகவும் இருக்கிறது.
எனக்கு தேவிகாவுடன்தான் வாழ கொடுத்து வைக்கவில்லை… என் மகளையாவது வாழ வைக்க முடியுமா என்றுதான் இத்தனை முயற்திகள் எடுக்கிறேன்” என்றார் தேவதாஸ் அழுதபடியே.

Comments

Most Recent