தட்டிக்கேட்க தயங்குவது ஏன்?ஞாயிற்றுக்கிழமை மதியம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "மறக்க முடியுமா?' நிகழ்ச்சி, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பற்றிய  நினைவலைகளைக் கொண்டு வந்து நமது நெஞ்சங்களை நிறைத்தது. திரையில், நகைச்சுவை மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பிய  கலைவாணரின் வாழ்வில், திரைக்குப் பின்னே நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை அவரது வாரிசுகள் நினைவுகூர்ந்தனர். அவரைப் பற்றிய அரிய புகைப்படங்களையும், அவர் நடித்த  படங்களிலிருந்து சுவாரசியமான காட்சிகளையும் சேர்த்து வழங்கியதால் நேரம் போனதே தெரியவில்லை. இந்த வாரமும் தொடருமாம். ஆவலுடன் காத்திருக்கிறோம்.
ன்றைய தினம் மெகா தொலைக்காட்சியில் "சிவாஜி கணேஷன் மற்றும் பலர் நடித்த "ஜல்லிகட்டு' படத்தைப் பார்த்து மகிழ' நேயர்களை அழைத்துக்  கொண்டிருந்தனர். ஒற்றெழுத்தை விட்டுத் தள்ளுங்கள், கணேசன் கணேஷன் ஆனதைக் கூடவா கவனித்துத் திருத்த முடியாது? அன்று மதியம் செய்தி  வாசித்த அம்மணியும் கடித்துக் குதறிவிட்டார், தமிழை. மெகாவில் மட்டும்தான் என்றில்லை, பொதுவாக, எல்லாச் சானல்களிலுமே பெரும்பாலான  செய்தி வாசிப்பாளர்கள் தமிழைச் சித்திரவதை செய்வது தடுப்பார் யாருமின்றித் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எது எதற்கோ குரல் கொடுக்கும்  தமிழ் ஆர்வலர்கள் இதனைத் தட்டிக்கேட்கத் தயங்குவது ஏன்?
சந்த் தொலைக்காட்சிப் பக்கம் திரும்பினால் அங்கே  "இந்தியா, இந்தியா...' என்றொரு தேசபக்திப் பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.  மெய்சிலிர்க்கப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென,  "சாப்பிடலாம் வாங்க' என்றொரு கார்டு திரையில் தோன்றியதும் திகைத்துப் போனோம். வாருங்கள் எல்லோரும் சேர்ந்து இந்தியாவைச் சாப்பிடலாம் என்று நம்மையும் அழைத்ததைப் போல் இருந்தது. நல்லவேளையாக அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, அடுத்து வரவிருந்த  சமையல் நிகழ்ச்சிக்கான தலைப்புதான் அது என்பது தெரிந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். ஒரு நிகழ்ச்சி முடிந்து அடுத்த நிகழ்ச்சிக்குச்  செல்லும் முன்னர் குறைந்தபட்சம் ஒரு சிறிய இடைவெளி வேண்டும் என்கிற அடிப்படை கூடவா  தெரியாது...?  (நிகழ்ச்சி பற்றிய பிரமோவோ, சானல் மாண்டேஜோ போட்டிருக்கலாமே...!)
பொதிகையிலோ ஏற்கெனவே கிண்டிய உப்புமாவை மறுபடியும் கிளறிக் கொண்டிருந்தார்கள். அதாவது, பொரி உப்புமா செய்முறையை மறு ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தார்கள் (அவ்வளவு வரவேற்பா? இல்லை, வேறு நிகழ்ச்சி எதுவும்  கைவசம் இல்லையா?).   தண்ணீரில் முக்கியெடுத்த பொரியை அனாயசியமாக இரு கைகளாலும் பிழிந்து, கடாயில் போட்டுப் புரட்டியெடுத்த  விதத்திலிருந்தே, கற்றுக்கொடுத்தவர் மிகச் சிறந்த சமையல் வல்லுனர் என்பது தெரிந்தது. ஆனால், சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கைகளுக்குக்  கிளவுஸ் போட்டிருக்கலாமே? பொரி உப்புமாவைப் புரட்டியெடுத்துத் தட்டில் பரிமாறுவதற்குள், தொலைபேசி மூலம் நேயர்கள் கேட்ட கேள்விகளுக்கும்  பதிலளித்து அசத்திய தொகுப்பாளர், நவீனமுறையில் (கரண்டி, ஓவன் மூலம்) சமைப்பவர்களையும் மனதில் கொள்ளலாமல்லவா?
தே நிகழ்ச்சியில், "காஷ்மீர் புலாவ்' செய்வதைப் பற்றிக் குறிப்பிடும்போது, பைனாப்பிள் துண்டுகளுடன், "மாகி சாஸ்' சேர்க்கச் சொன்னார் அந்த  வல்லுனர். ஏன் கிஸôன் சாஸ் சேர்த்தால் புலாவ் சுவைக்காதா என்ன? பிராண்டுக்கு எதற்கய்யா அத்தனை முக்கியத்துவம்?
புதனன்று காலை கலைஞர் தொலைக்காட்சியின் "மறக்க முடியுமா?' நிகழ்ச்சியில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜின்னாவின் பேச்சில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியில் பேட்டி கண்டவருக்குக் கேள்வி கேட்கும் வேலை எதுவும் வைக்காமல் தானாகவே சம்பவங்களை நினைவுகூர்ந்த ஜின்னாவின் மடைதிறந்த வெள்ளம்  போன்ற பேச்சு, சுவாரசியமான பல தகவல்களைக் கொண்டிருந்தது. நாடாளுமன்றத்தில் தான் ஆற்றிய முதல் உரையை (ஆங்கிலத்தில்) அப்படியே அவர்  பேசிக் காட்டியது (ஒருவேளை மனப்பாடம் செய்திருப்பாரோ...!) நேயர்களை நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும்.
மிசா காலத்துச் சிறை அனுபவங்களைப் பற்றிக் கூறும்போது, அதே சிறையில் இருந்த ஸ்டாலின் பட்ட துன்பங்களை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்தார். கட்சிக்காக ஸ்டாலின் எப்படியெல்லாம் பாடுபட்டு முன்னேறியுள்ளார் என்பது நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும். மூத்த தலைவர்கள் கட்சியை வளர்த்த விதத்தை, இளையவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அமைந்த, ஜின்னாவின் பேட்டியை கட்சியில் மூத்தவர்கள் அனைவரும் நிச்சயமாக ரசித்திருப்பார்கள்.
தனைத் தொடர்ந்து ஒளிபரப்பான "ஒன்றே சொல், நன்றே சொல்' நிகழ்ச்சியில், பின்னலாடைத் தொழிலாளர்களின் நிலை குறித்து, சுப்ரபாரதிமணியன்  எழுதிய நூலைப் பற்றிக் குறிப்பிட்டார் சுப.வீரபாண்டியன். பின்னலாடைத் தொழிற்சாலைகளில், கூலித்தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்,  அவற்றில் சிக்கிக்கொள்ளும் இளம் பெண்களின் பரிதாப நிலை போன்றவை பற்றி நூலில் குறிப்பிட்டுள்ளவற்றை, ரத்தினச் சுருக்கமாக சுப.வீரபாண்டியன் சுட்டிக்காட்டியபோதே நமக்கு இதயம் கனக்கிறதே, இன்னும் புத்தகத்தில் விரிவாகப் படித்தால் எப்படி இருக்கும்? எப்படியோ, சுப.வீரபாண்டியனார், ஒன்றே சொன்னார், அதுவும் நன்றே சொன்னார், நடவடிக்கை எடுக்கவேண்டியவர்கள் கவனத்திற்கு அது வந்திருக்கும் என்றும் பரிதாபத்திற்குரிய கூலித்தொழிலாளர்களின் நிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் நம்புவோமாக...!
போகோ சானலில் ஒளிபரப்பாகும் "நியூ அட்வென்சர்ஸ் ஆஃப் ஹனுமான்' குழந்தைகளை ஈர்த்து வருகிறது. பள்ளிச் சிறுவன் "மாருதி'யாக வரும் ஹனுமான், விண்கலங்களில் வரும் நவீன யுக அரக்கர்களைத் துவம்சம் செய்கிறார். லேசர் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட நவீன ஆயுதங்களையும் தீயசக்தி ரோபோக்களையும் தமது கதாயுதத்தால் ஹனுமான் அடித்து நொறுக்கும்போது, குழந்தைகளின் உற்சாகத்தைப் பார்க்கவேண்டுமே...! புராணக் கதைகளிலும் புதுமையைப் புகுத்திக் குழந்தைகளைக் கவரும் போகோவைப் பாராட்டாவிட்டால் எப்படி...?

Comments

Most Recent