பார்த்திபனின் புத்தகம் அனுமதியின்றி இணையதளம் மூலம் விற்பனை




சென்னை, பிப்.15: தனது கவிதைத் தொகுப்பான "கிறுக்கல்கள்' நூலின் பிரதிகளை அனுமதியின்றி இணையதளம் நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வருவதாக மாநகரப் போலீஸ் கமிஷனரிடம் நடிகர் ஆர். பார்த்திபன் புகார் அளித்தார்.
இது குறித்த விவரம்:
"புதிய பாதை' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பார்த்திபன். இவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு "கிறுக்கல்கள்' என்ற பெயரில் நூலாக கடந்த 2000}ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
ரூ. 250 விலையில் "கிறுக்கல்கள்' நூல் இப்போதும் பல்வேறு தரப்பினரால் விரும்பி வாங்கப்பட்டு வருகிறது.
இதன் விற்பனை மூலம் கிடைக்கும் நிதியை "ரா. பார்த்திபன் மனித நேய மன்றத்துக்கு' அளிக்கப்பட்டு பல்வேறு சூழல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தனது குரல் பதிவுடன் இந்த நூலின் கணினி பதிப்பை வெளியிட திட்டமிட்ட பார்த்திபன் அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரனை திங்கள்கிழமை காலையில் நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
இது குறித்து நிருபர்களிடம் பார்த்திபன் கூறியது:
கிறுக்கல்கள் நூலை எவ்வித அனுமதியும் இன்றி தனியார் இணைய தளம் ஒன்று ரூ. 400 விலையில் உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
இதன் மூலம் நூலின் அச்சுப்பதிப்பை வாங்காமல் பல்லாயிரம் பிரதிகள் வரை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
உலகின் பல்வேறு நாடுகளில் இதன் மூலம் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பிரதிகள் இதுவரை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
எழுத்தாளரின் அனுமதியின்றி நடைபெறும் இத்தகைய எழுத்துத் திருட்டை தடுக்க, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார் பார்த்திபன்.
உடனடி நடவடிக்கை: இந்த புகார் குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகர மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீஸôருக்கு கமிஷனர் டி. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Comments

Most Recent