"செல்லம்!, ஐ லவ்யூடா.."

பிரகாஷ்ராஜ் ….! தமிழ் வெகுஜனசினிமாவின் ஆச்சர்யமான ஆளுமைகளில் ஒருவர். ஒரு பக்கம் இலக்கணம் மாறாத ஃபார்முலா வில்லனாக நடித்துக்கொண்டே நல்ல சினிமாவை நேசிக்கும் கலைஞர். சினிமாவில் ஈட்டும் பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்து,  தனக்கு அடையாளம் தந்த தமிழ் சினிமாவின் ரசனையை உயர்த்த,  தரமான படங்களை தயாரிப்பவர்.
ஏழை நெசவுத் தொழிலாளியாக இவர் வாழ்ந்த காஞ்சிவரம் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அள்ளிய வெற்றிகளிப்பில் இருக்கும் பிரகாஷ்ராஜின் சொந்த வாழ்க்கை,  அவரது சினிமா வாழ்கையைப் போல சிறப்பானதாக இல்லை.

கடந்த ஆண்டு  நவம்பர் 18 தேதி தனது மனைவி  லலிதாகுமாரியை சட்டபூர்வமாக மணவிலக்கு செய்த பிரகாஷ்ராஜ்  தனக்கும் பாலிவுட் பட உலகின் நடன இயக்குனர் போனி வர்மாவுக்கும்  காதல் இல்லை என்பதை அவர் தயாரித்த அபியும் நானும் இசை வெளியீட்டு விழாவில் திட்டவட்டமாக மறுத்தார்.
“மனைவியை பிரிந்ததற்காக நிறைய பேர் கேவலமாக பேசினார்கள்,  திட்டினார்கள். என்னை பாராட்டியவர்களெல்லாம் கூட ஏளனம் செய்தார்கள். இதற்காக நான் அழுது இருக்கிறேன். ஆனால் உடைந்து போகமாட்டேன். மனைவியுடன் சேர்ந்து வாழ எனக்கு கொடுத்து வைக்கவில்லை. நிறைய சந்தோஷங்கள் எனக்கு கிடைத்து இருக்கிறது. அதேபோல் துன்பங்களையும் அனுபவித்து இருக்கிறேன். எங்கள் பிரிவு குழந்தைகளை பாதிக்கவில்லை. அவர்களுக்கு நாங்கள் அப்பா, அம்மாவாகத்தான் இருக்கிறோம். அவர்கள் மீது கடைசி வரை பாசம் செலுத்துவோம். இன்னொரு திருமணம் செய்து கொள்வது பற்றி நான் சிந்திக்கவில்லை. ஒரு உறவை பிரிந்ததே கஷ்டமாக இருக்கிறது.”என  அந்த விழாவில் பிரகாஷ்ராஜ் பேசியிருந்தார்.
 பொது  மேடையில் பேசிய இந்தப் பேச்சை இப்போது அவரே பொய்யாக்கப் போகிறார் என்ற நம்பகமான வட்டாரத் தகவல் நம் காதுகளை எட்டுகிறது. இப்போது பிரகாஷ் ராஜ்,  போனிவர்மா இருவரும் ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வசித்து வருகிறார்கள் என்ற தகவல் கிடைகிறது. எதிவரும் ஜூலை மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும்,  இந்த திருமணத்துக்கு போனிவர்மாவின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள் என்றும் அதே நம்பிக்கை வட்டாரங்கள்  மேலும் தெரிவிக்கின்றன.
பிரகாஷ்ராஜ் தயாரித்த வெள்ளித் திரை,  மொழி ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணிபுரிய அவரால் பாலிவுட்டிலிருந்து வலுவில் அழைத்து வரப்பட்டவர்தான் இந்த போனி வர்மா!  இரண்டாவது திருமணம் செய்து கொள்ள பிரகாஷ்ராஜ் காட்டும் வேகம் அவர் நடித்த கில்லி படத்தின் பாத்திரத்தை நினைவு படுத்துகிறது என்கிறார்கள் பிரகாஷ்ராஜுக்கு நெருக்கமானவர்கள். 
"செல்லம்!, ஐ லவ்யூடா.."

Comments

Most Recent