சோழர் வரலாற்றை தவறாக சித்தரிக்கும் ஆயிரத்தில் ஒருவன் - தடை கோரி வழக்கு

http://thatstamil.oneindia.in/img/2010/02/06-aayirathil-oruvan-1-200.jpg
சோழர் வரலாற்றை தவறாக சித்தரிக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சோழர் பேரவை வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் ஏற்கப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டு வரும் பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சோழர் பேரவை என்ற அமைப்பின் நிறுவனர் தலைவர் டி.வி.கே.அழகிரி தாக்கல் செய்துள்ள மனுவில்,

"ஆயிரத்தில் ஒருவன்' என்ற சினிமா சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் சோழர் காலத்தில் நடந்ததாக சில காட்சிகள் காட்டப்படுகின்றன. உண்மையிலேயே சோழர் காலம் என்பது ஒரு பொற்காலமாக கருதப்பட்டது. உலகத்திலேயே ஜனநாயக ஆட்சியை கொண்டுவந்த முதல் ஆட்சி சோழர் காலத்தில்தான் அமைந்தது.

ஆனால், சோழர்கால சம்பவங்கள் என்று 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் சில காட்சிகளை புகுத்தியுள்ளனர். அதில், சோழர்காலம் நாகரிகமற்ற மனிதர்களும், காட்டுமிராண்டிகளும் இருந்த காலகட்டம் என்பது போல் படத்தில் காட்சிகள் வருகின்றன.

மனிதர்களை பலி கொடுப்பது போலவும், மக்களை சோழ அரசன் அடிமைகளாக வைத்திருந்தது போலவும் காட்சிகள் உள்ளன. மேலும், சோழர் காலத்து மக்கள் பிச்சைக்காரர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இதைவிட கொடுமையாக பசியாக இருக்கும் பெண் தனக்கு உணவு கிடைப்பதற்காக அரசன் முன்பு மார்பை காட்டிக்கொண்டு நிற்பது போன்ற காட்சியும் வருகிறது.

படத்தின் தொடக்கத்தில், 'இந்த படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே' என்று டைட்டிலில் கூறப்பட்டிருந்தாலும், அதில் உண்மையாக நடந்த சம்பவத்தையும், அப்போது இருந்த நபர்களையும் பற்றி தவறாக சித்தரிக்கின்றனர். கற்பனை என்பது நடந்த சம்பவத்தை கூறுவதாக எடுத்துக் கொள்ள முடியாது.

இந்த படத்தால் சோழர் காலத்தை பற்றிய தவறான எண்ணம் வருங்கால தலைமுறைக்கு ஏற்படும். ஒரு மனிதனின் வரலாற்றை கற்பனையாக மாற்றி சித்தரிப்பதற்கு உலகத்தில் யாருக்கும் உரிமை கிடையாது.

இதுபோன்ற படத்தால் வரலாறுகள் தவறாக கருதப்பட்டு விடும். எனவே, இந்த படத்தை மேற்கொண்டு திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். இந்த படத்துக்கு தணிக்கை துறை வழங்கியுள்ள சான்றிதழை ரத்து செய்வதற்கு தணிக்கை துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்", என்று கூறியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டு, நேற்று வெள்ளிக் கிழமை நீதிபதி மணிவாசகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி,​​ இதுதொடர்பாக பிப்ரவரி 17-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கிரீன் வேலி தயாரிப்பு நிறுவனம்,​​ இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Comments

Most Recent