மன்னிப்பு கேட்டார் ஜெயராம்: வீடு, அலுவலகம் மீது தாக்குதல்

த‌மி‌ழ் பெ‌ண்களை அவதூறாக பே‌சிய நடிக‌ர் ஜெயரா‌ம் மன்னிப்புக் கோரியுள்ள நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

பிரபல நடிகர் ஜெயராம் நடித்த 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' என்ற மலையாள படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இ‌ந்த பட‌‌த்‌தி‌ல் வீட்டு வேலைக்காரப் பெண்ணை ''சை‌ட்'' அடிப்பது போல் காட்சிகள் உள்ளன.

இந்நிலையில் ஏசியா நெட் தொலைக்காட்சியின் 'டாக் ஷோ'வில் பங்கேற்ற ஜெயராமிடம், இது பற்றி குறிப்பிட்டு நிஜ வாழ்க்கையில் நீங்கள் வேலைக்காரியை சைட் அடித்து இருக்கிறீர்களா? என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு பதில் அளித்து ஜெயராம் கூறும்போது, என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி, போத்து (எருமை) மாதிரி இருப்பாள்; அதைப்போய் எப்படி சைட் அடிக்க முடியும் ? " என்றார்.இது அந்த தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ஒளிபரப்பானது.

ஜெயரா‌மி‌ன் இ‌ந்த கருத்துக்கு திரையுலகினரும், மகளிர் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தனர்.

அத்துடன் பா.ம.க. வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மாநில பொறுப்பாளர் இந்திராணி, இது தொடர்பாக ஜெயராம் மீது எழும்பூர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மனு‌த் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், த‌மி‌ழ் பெ‌ண்களை அவதூறாக பே‌சியதற்காக ஜெயரா‌மின் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தின் மீது 'நாம் தமிழர்' அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று தாக்குதல் நடத்தினர்.

இதில், அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 25 பேர் கொண்ட குழுவினர் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டதாகவும், 6 பேர் சரணடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தமது பேச்சுக்காக ஜெயராம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.தமது தாய் தமிழ்ப் பெண் என்றும் ,தமது தாய் மொழி தமிழ் என்றும், தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்துவது தமது தாயை இழிவுப்படுத்துவதற்கு சமமானது என்றும், நகைச்சுவையாகவே தாம் தொலைக்காட்சியில் அவ்வாறு கூறியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Comments

Most Recent