Entertainment
›
Cine News
›
கூட்ட நெரிசல்.. அனுமதி மறுப்பு... செல்போனை தூக்கிப் போட்டு உடைத்த ராதிகா!
முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் வழக்கம் போலவே ஏகப்பட்ட குழப்பங்கள், கடைசி நேர சொதப்பல்கள். நேரு உள்விளையா...
முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் வழக்கம் போலவே ஏகப்பட்ட குழப்பங்கள், கடைசி நேர சொதப்பல்கள்.
நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏறத்தாழ 7,000 பேர் அமரலாம். ஆனால் 14,000 அழைப்பிதழ்கள் அடிக்கப்பட்டுவிட்டனவாம்.
இதனால் விழா நாளன்று உள்ளே இருந்த கூட்டத்துக்கு நிகராக வெளியிலும் குழுமி நின்று சாலைளை ஸ்தம்பிக்க வைத்தனர்.
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்ட முக்கியமானவர் ராதிகா சரத்குமார். அவர் கொண்டு வந்திருந்த பாஸ், அடையாள அட்டை என எதைக் காட்டியும் உள்ளே அனுமதிக்க தாமதப்படுத்தினர்.
இதனால் கடும் ஆத்திரம் கொண்ட ராதிகா, திட்டிக் கொண்டே, அரங்கத்துக்குள் இருந்த சரத்குமாரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தாராம். ஆனால் செல்போன் அலைகள் தடுக்கப்பட்டிருந்ததால், சரத்தை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லாததால், அந்த மகா காஸ்ட்லி செல்போனை ஆத்திரத்துடன் நடு ரோட்டில் போட்டு உடைத்தார் ராதிகா.
பின்னர் மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டியபடியே தனது காருக்குள் அமர்ந்தவர், வீட்டுக்கு போய் விட்டார்.
ராதிகாவுக்கு மட்டுமல்ல, இன்னும் பல நட்சத்திரங்களுக்கும் அன்றைக்கு இதே நிலைமைதான் ஏற்பட்டதாம்.
'நான்கு மணிக்கே அரங்குக்கு வந்து இருக்கையில் அமரச் சொல்லி அழைப்பிதழில் போட்டிருந்தோம். ஆனால் இவர்கள் எப்போதும் போல மிகத் தாமதமாக, கடைசி நேரத்தில் வந்ததால் இந்த நிலை. அதைப் புரிந்து கொள்ளாமல் எங்களைத் திட்டி என்ன பயன்' என்று பதிலுக்கு கத்தினார் வாசலில் இருந்த ஒரு காவலர்.

Comments
Post a Comment