பாலாவின் தீவிர ரசிகர்களின் நானும் ஒருவன். அவர் படங்களை உடனே பார்க்கத் துடிக்கிறேன். ஆனால் அவரோ என்ன காக்க வைக்கிறாரே, என்றார் இயக்குநர் க...
பாலாவின் தீவிர ரசிகர்களின் நானும் ஒருவன். அவர் படங்களை உடனே பார்க்கத் துடிக்கிறேன். ஆனால் அவரோ என்ன காக்க வைக்கிறாரே, என்றார் இயக்குநர் கே பாலச்சந்தர்.
தனது பட விழாவுக்கே வரலாமா வேண்டாமா என்று யோசிக்கும் மனிதரான பாலா அதிசயமாக, இன்று காலை நடந்த ஒரு புதுப்படப் பூஜைக்கு வந்திருந்தார்.
விழாவில் திரையுலகப் பிரமுகர்கள் ஏராளமாய் வந்திருந்தனர். எல்லோரையும் பேசச் சொல்லிவிட்டதால் போதும் போதும் எனும் அளவு பேசித் தீர்த்தார்கள். 3 மணி நேரத்துக்கும் அதிகமான பேச்சு.
சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான கே பாலச்சந்தர் மைக் பிடித்தார். அவர் கூறுகையில், "நான் உண்மையைச் சொல்றேன்... பாலா மாதிரியெல்லாம் என்னால படம் எடுக்க முடியலியேன்னு வெட்கமாக இருக்கிறது. நான் பாலாவின் தீவிர ரசிகன். அவர் படங்களைப் பார்த்து நான் நிறைய கத்துக்கிட்டேன்.
கத்துக்கிறதுக்கு வயசு ஏது? கத்துக்கிட்டு அவர் மாதிரி படம் எடுப்பேனான்னு கேக்காதீங்க... அது முடியாம கூட போகலாம். ஆனா பாலா படங்களிலிருந்து கத்துக்கிறேன் என்பது உண்மை.
அத்தனை அற்புதமான படைப்பாளி... ஆனா அநியாயத்துக்கு காக்க வைக்கிறாரே... பாலா நீங்க ஒரு படம் கொடுக்க 6 மாசம் எடுத்துக்குங்க. ஒரு வருஷம் கூட ஓகே... ஆனா அதுக்குள்ள படத்தை கொடுத்திடுங்க. என்னால பொறுமையா இருக்க முடியல..." என்றார்.
அமைதியாக பாலச்சந்தரையே பார்த்துக் கொண்டிருந்தார் பாலா. பின்னர் பேசச் சொல்லி அவரை அழைக்க, 'நான் என்னைக்கு பேசியிருக்கேன்!' என்பது போல பார்த்துவிட்டுச் சிரித்தார். பின்னர் பாலச்சந்தரிடம் பேசிவிட்டு கிளம்பினார்.
Comments
Post a Comment