Oscar... Why not me? - Sarathkumar

http://thatstamil.oneindia.in/img/2010/03/13-sarath-radhika200.jpg

என் ஆயுள் காலத்துக்குள் நிச்சயம் ஆஸ்கர் விருதினை வாங்கிவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் ஆஸ்கர் வாங்கும்போது, என்னால் வாங்க முடியாதா? என்றார் சரத்குமார்.

விடியல் படத்தின் பிரஸ் மீட்டில் போதும் போதும் எனும் அளவு சரத் பேசித் தள்ளிவிட்டார்.

விடியல் படத்தைவிட வேறு விவகாரங்கள் பற்றியே அவர் பேச்சு அதிகமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் ஆஸ்கர் விருது பற்றி அவர் பேச்சு திரும்பியது. அப்போது அவர் இப்படிச் சொன்னார்:

நான் சினிமாவில் 27 வருஷமா இருக்கேன். சொல்லிக் கொள்ளும் அளவு பெரிய வெற்றிப் படங்களில் நடித்தவன் நான்.

நடிக்க வந்ததிலிருந்தே ஆஸ்கர் விருது மீது எனக்கு பெரிய கனவு இருந்தது.

எப்படியாவது ஆஸ்கர் விருதினை வெல்ல வேண்டும். அதற்கான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று.

நம்ம ஊர் ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் அந்த விருதினை வென்றதும் எனது நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ரசூல் பூக்குட்டிகூட என்னிடம், 'உங்க ஸ்கிரீன் பிரசன்ஸ் சூப்பரா இருக்கு. நீங்க பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் நடிக்கலாம்' என்றார்.

இப்போது நான் நிறைய மலையாளப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். ஒரு கன்னடப் படம் பண்ணுகிறேன். பாலிவுட் படமும் பண்ணுகிறேன். ஹாலிவுட்டிலும் வாய்ப்புகள் வந்தால் பண்ணுவேன். நிச்சயம் ஆஸ்கர் வெல்வேன்.

ஏன்... நமது ரஜினி, கமல் போன்றவர்களும் ஆஸ்கர் வெல்லலாம்.

எப்படியும் 90 வயது வரை நான் இருப்பேன். அதற்கான உடல் மன பலம் எனக்கு இருக்கிறது. 85 வயதில் கூட டூயட் பாட முடியும். டூயட் பாட கால்கள் நன்றாக இருந்தால் போதும். மற்றபடி வயது ஒரு தடையில்லை.

குறைந்த பட்ஜெட் படங்கள்...

இனி பெரும் முதலீட்டில் படங்கள் பண்ண வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். இந்த விடியல் படத்தைக் கூட ஆர்ஆர்ஆர் மூவீஸ் சார்பில் நான்தான் முதல் பிரதி தயாரிப்பாளராக இருந்து செய்து கொடுக்கிறேன். பட்ஜெட் 3.5 கோடி ரூபாய்தான்.

இந்த மாதிரி சிறு முதலீட்டில் படமெடுத்து அதில் பெரிய லாபம் பார்ப்பதுதான் பெஸ்ட். ரூ 100 கோடி செலவழித்து ரூ 10 கோடி லாபம் சம்பாதிப்பதில் என்ன இருக்கிறது...

இந்த ஆண்டு நானே மூன்று படங்கள் தயாரிக்க உள்ளேன். இவை மூன்றும் 1 கோடி முதல் ஒன்றரை கோடி ரூபாய் பட்ஜெட்டில் மட்டுமே உருவாகும். லாப நஷ்டம் பெரிதாக பாதிக்காது. இந்த மூன்று படங்களும் எனது சொந்தப் படங்கள். இது எனது புதிய முடிவு. ஆனால் யாராயும் இதைப் பின்பற்றச் சொல்ல மாட்டேன். நான் பரீட்சார்த்த முறையில் எடுத்து அது வெற்றி பெற்றால் நிச்சயம் அதைப் பற்றி மற்றவர்களுக்கும் சொல்வேன்..." என்றார்.

Comments

Most Recent