சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கிறார் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். ரூ 11.59 கோடியைத் திருப்பித் தருமாறு அனில் அம்பானியின் ரிலை...
சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கிறார் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
ரூ 11.59 கோடியைத் திருப்பித் தருமாறு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும் சவுந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவும் இணைந்து ரஜினியின் முதல் அனிமேஷன் படமான சுல்தான் தி வாரியரை தயாரிக்க திட்டமிட்டது.
2008-ல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. 2009- ஏப்ரலில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படம் இதுவரை வெளிவரவில்லை. தாமதமாவது தொடர்ந்ததால் ஒப்பந்தத்தை முறித்து, படத்திலிருந்து விலகிக் கொண்டது ரிலையன்ஸ்.
இப்போது சுல்தான் படத்தை வரும் ஜூன் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் சவுந்தர்யா. இதனை அறிந்த ரிலையன்ஸ் உடனடியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
அதில் பழைய பாக்கியை முடிக்காமல் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்றும், உடனடியாக தங்களின் ரூ 11.59 கோடியை 12 சதவிகித வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இதுபற்றி ஆக்கர் ஸ்டுடியோ நிறுவனத் தலைவர் லதா ரஜினியிடம் கேட்ட போது, 'வழக்கெல்லாம் ஏதுமில்லை. பேச்சுவார்த்தை நடக்கிறது. அனைத்தும் சுமூகமாக முடிந்துவிடும்' என்றார்.
இந்நிலையில் வரும் மார்ச் 29-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருவதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment