Sun TV 'Metti Oli' Thiru Murugan next to direct Nathaswaram

http://cinema.dinakaran.com/cinema/gallery/ct21.jpg

‘மெட்டி ஒலி’ தொடரை அடுத்து திருமுருகன் இயக்கும் ‘நாதஸ்வரம்’ மெகா தொடர், சன் டி.வியில் ஏப்ரல் முதல் ஒளிபரப்பாகிறது.
சன் டி.வியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ என்ற மெகா தொடர் மாபெரும் வரவேற்பு பெற்றது. அத்தொடரை இயக்கியவர் திருமுருகன். கோபி என்ற கதாபாத்திரத்திலும் நடித்தார். இப்போது நாதஸ்வரம் தொடரை இயக்கியுள்ள அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சன் டி.வியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’, உலகம் முழுவதிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து கதை எழுதி இயக்கும் தொடர் ‘நாதஸ்வரம்’. காரைக்குடியில் செட்டி நாடு அரண்மனை பிரபலம். ஒரு தெருவில் தொடங்கி மற்றொரு தெருவில் அதன் எல்லை வியாபித்திருக்கும். அதில் பெற்றோர், பிள்ளைகள் என்று சிலர் மட்டுமே வசிப்பார்கள். அதிலும் மகன்கள் வெளிநாடு சென்றிருப்பர். ஒரேயொரு ஆச்சி மட்டும் வாழ்வார். அந்த அரண்மனைக்குப் பின்னால் சிறு சிறு வீடுகளில் மக்கள் வசிப்பார்கள். இவர்களைப் பற்றிய கதைதான் ‘நாதஸ்வரம்’. இதில் நாதஸ்வர வித்வானாக மவுலி நடிக்கிறார். தன் வாரிசாக மகன் வரவேண்டும் என எண்ணுவார். அவர் வர மறுப்பார். மகன் வேடத்தில் நான் நடிக்கிறேன். இதில் நடிக்கும் மற்ற அனைவரும் இதுவரை கேமரா முன் முகம் காட்டாதவர்கள்.

இதற்காக சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் தேர்வு நடத்தினோம். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய 40 பேரை முதல் கட்டமாக தேர்வு செய்துள்ளோம். தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் 3&நாள் நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. நடிகர் நாசரின் ‘அடவு பவுண்டேஷன்’ இப்பயிற்சி பட்டறையை நடத்தியது.
வரும் 19&ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்குகிறது. ஏப்ரல் மாதம் முதல் சன் டி.வி.யில் இரவு 7.30 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இதன் கதை இயக்கம் பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன். வைரமுத்து பாடல் எழுதுகிறார். சஞ்சீவி ரத்தன் இசை அமைக்கிறார். சரத் கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பாஸ்கர் சக்தி வசனம் எழுதுகிறார். இவ்வாறு திருமுருகன் கூறினார்.

Comments

Most Recent