ஹீரோயினை கண்ணில் காட்ட மறுக்கிறார்கள் : சத்யராஜ் தமாஷ்!

Sathyaraj

‘ஊமை விழிகள்’ படத்தை இயக்கிய அர்விந்தராஜ், நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கும் படம் ‘இரண்டு முகம்’. உடையார் ஸ்டுடியோஸ் சார்பில் கே.வைத்தியலிங்கம் தயாரிக்கிறார். சத்யராஜ், கரண் ஹீரோக்கள். சுஹானி, அனிகா ஹீரோயின்கள். இப்படம் பற்றி நிருபர்களிடம் சத்யராஜ் கூறியதாவது:

உலகில் 600 கோடி பேர் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு முகங்கள் இருக்கிறது. அப்படியானால் மொத்தம் 1200 கோடி பேர்கள் என்று கணக்கிட்டுக்கொள்ளலாம். எனக்கு கூட இரண்டு முகம் இருக்கிறது. மைக் முன் நின்று பேசுவது ஒருமுகம், இங்கிருந்து போனபிறகு பேசுவது மற்றொரு முகம்.

இரண்டு ஹீரோக்கள் படங்களில் ஹீரோவுக்கு சமமான வேடம் இருந்தால் நடிப்பேன் என்று நான் சொன்னது தப்பாகிவிட்டது. வாய்ப்பு கொடுக்கிறார்களே தவிர, கதாநாயகிகளை கண்ணில் கூட காட்டுவதில்லை. ‘குருசிஷ்யன்’ படத்தில் நானும், சுந்தர்.சியும் நடித்தோம். போட்டோ எடுக்கும் போது கூட என்னுடன் கதாநாயகியை நிறுத்தவில்லை. அதேபோல் ‘முறியடி’ படத்தில் ரம்யா நம்பீசன் நடித்தார். அவருடனும் என்னை நிற்க வைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக ‘இரண்டு முகம்‘ படத்தில் 2 கதாநாயகிகளை படப்பிடிப்பில் கூட பார்த்தது கிடையாது. இந்த மேடையில்தான் பார்க்கிறேன்.

இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். படப்பிடிப்புக்கு போவதற்கு முன்பு ஒத்திகை பார்க்க வேண்டும் என்ற கமல்ஹாசன் கூறி இருக்கிறார். அதை வரவேற்கிறேன். அவர் சொல்வதுபோல் செய்தால் 50 நாள் ஓடக் கூடிய படம் கூட வெள்ளிவிழா கொண்டாடும். இவ்வாறு சத்யராஜ் பேசினார். டைரக்டர் அர்விந்தராஜ், கரண், சுஹானி, அனிகா, ரூபன்ராஜ், கே.வைத்தியலிங்க உடையார் ஆகியோர் உடனிருந்தனர்.

Comments

Most Recent