Ranjitha returens Chennai; speaks on Nithyanantha issue | சென்னையில் ரஞ்சிதா-புத்தகம் எழுதுகிறார்!

http://thatstamil.oneindia.in/img/2010/06/27-ranjithaa200.jpg
சென்னை: நித்தியானந்தா விவகாரத்தில் சிக்கி தலைமறைவான நடிகை ரஞ்சிதா தற்போது சென்னை திரும்பியுள்ளதாக தெரிகிறது. ரகசியமான இடத்தில் தங்கியிருக்கும் அவர் தலைமுடியை குட்டையாக்கி, மாடர்ன் உடையில் இருக்கிறாராம். தனது அனுபவங்களை புத்தகமாக எழுதி வருவதாகவும் அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நித்தியானந்தாவைக் கைது செய்த கர்நாடக போலீஸார், ரஞ்சிதாவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக அவரைத் தேடி வந்தனர். இதுதொடர்பாக விசாரணைக்கு வருமாறும் கூறி உத்தரவிட்டனர். ஆனால் ரஞ்சிதா இதுவரை ஆஜராகவில்லை. அமெரிக்காவுக்கு அவர் ஓடி விட்டதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால் தற்போது ரஞ்சிதா சென்னை திரும்பி ரகசியமான இடத்தில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தலைமுடியை வெட்டி பாப் கட் செய்து, ஜீன்ஸ் டீசர்ட் சகிதம் அவர் காணப்படுகிறாராம். தனது அனுபவங்களை அவர் புத்தகமாக எழுதி வருகிறாராம்.

இதுகுறித்து அவர் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,

சாமியார் நித்யானந்தா சம்பந்தமாக கடந்த 6 மாதத்தில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், அதனால் ஏற்பட்ட அவலங்கள், எனது மனதில் ஏற்படுத்திய காயங்கள் ஆகியவற்றை விவரித்து நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன்.

இந்த புத்தகம் தனிப்பட்ட பிரச்சினைகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் இருக்கும். இந்த புத்தகங்களை வெளியிட சில பதிப்பகங்களுடன் நான் பேசி வருகிறேன்.

இதுதவிர நான் இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு நாவலும் எழுதுகிறேன். இதில் எனது அனுபவம் பற்றி எழுதும் புத்தகம்தான் முதலில் வெளிவரும்.

எனது அறையில் ஒரு யோகியின் சுயசரிதை புத்தகம், மததலைவர் ஒருவருடைய ஆன்மீக புத்தகம் ஆகியவற்றை எப்போதும் வைத்துள்ளேன்.

நான் எப்போதுமே ஒரு புத்தக புழு. எந்த நாவல்களையும் விரும்பி படிப்பேன். இப்போது தத்துவ புத்தகங்களுக்கு மாறிவிட்டேன். குறிப்பாக இந்திய ஆன்மீக புத்தகங்களை விரும்பி படிப்பேன்.

நான் தலைமறைவான விஷயங்கள் குறித்தோ அல்லது கடந்த கால சம்பவங்கள் குறித்தோ பேச விரும்பவில்லை. கடந்த காலத்தை நினைத்து கொண்டிருக்க முடியாது. அதை விட்டு வெளியே வர விரும்புகிறேன்.

மன அழுத்தம், கஷ்டங்கள் என நான் மிகவும் காயப்பட்டு விட்டேன். அதை விட்டு புதிய வாழ்க்கையை நோக்கி செல்ல விரும்புகிறேன். எனக்கு எதிராக பல செய்திகள் பரப்பப்பட்டு விட்டன. நான் கொடுத்த பேட்டியையும் திரித்து வெளியிட்டு விட்டார்கள். இவை எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன்.

நடிகை என்றால் இது போன்ற கஷ்டங்களை தாங்கி கொள்வார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். என் கணவர், சகோதரிகள், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் எனக்கு பக்க பலமாக இருந்து என் கஷ்டங்களை தாங்க வைத்து விட்டனர்.

நான் நடித்த ராவணன் படத்தை இன்னும் பார்க்கவில்லை. மீண்டும் சினிமாவில் நடிப்பது பற்றியும் சிந்திக்கவில்லை. சினிமாவில் இருந்து சற்று ஓய்வு எடுக்க விரும்புகிறேன். நடிக்காத நேரங்களில் நான் மற்ற ராணுவ வீரர்கள் மனைவிகள் போல சமூக சேவையில் ஈடுபடுவேன்.

நான் சமீப காலங்களில் முக்கிய நபர்கள் யாரையும் சந்திக்கவில்லை. நான் சகஜ நிலைக்கு திரும்ப சிறிது காலம் ஆகும் என நினைக்கிறேன். என் காலடியை முன்னேற்ற பாதையை நோக்கி எடுத்து வைக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ரஞ்சிதா.

ரஞ்சிதா சென்னை திரும்பி விட்டதாக கூறப்பட்டாலும் கூட அது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை. அதேசமயம் அவரைப் பிடித்து விசாரிக்க கர்நாடக போலீஸாரும் தொடர்ந்து முயற்சித்து கொண்டிருக்கிறார்களாம்.
text

Comments

Most Recent