கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியப் பட விழாவுக்கு இந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகர், நடிகையும் போகக் கூடாது என திரையுலகினர் கூடி போட்ட தீர்ம...
கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியப் பட விழாவுக்கு இந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகர், நடிகையும் போகக் கூடாது என திரையுலகினர் கூடி போட்ட தீர்மானத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒப்புக் கொண்டு யாரும் போகக் கூடாது என கேட்டுக் கொண்டிருந்தது.
அப்படிப் போன நடிகர் நடிகையர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசப்பட்டது. நடிகை ஆசின் இலங்கை போனதை கடுமையாக கண்டித்திருந்த நடிகர் சங்க செயலாளர் ராதாரவியும், ஆசின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று நடிகர் சங்கம் அப்படியே நேர் மாறான ஒரு முடிவை எடுத்துள்ளது.
நடிகர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் இன்று நடிகர் சங்க வளாகத்தில் உள்ள சுவாமி சங்கரதாஸ் அரங்கத்தில் கூடியது.
காலை 10 மணிக்குத் தொடங்கியது. சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் கூடியது. கூட்டத்தில் செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர்கள் விஜயகுமார், மனோரமா, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
செயற்குழு உறுப்பினர்கள் சத்யராஜ், சூர்யா, முரளி, சார்லி, எஸ்.வி.சேகர், கே.ராஜன், சத்யப்ரியா, குயிலி, இணை செயலாளர்கள் கே.ஆர்.செல்வராஜ், அலெக்ஸ், கே.என்.காளை உள்பட ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
- இலங்கையில் தமிழ் இன படுகொலைக்கு காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்.
- இலங்கையில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் நாம் அறிவோம். தற்போது அங்குள்ள நம் தமிழர்களின் நிலையையும் அறிவோம். அவர்களின் பிரச்சினைகள் தீர மறு வாழ்வு திட்டத்திற்கு நம்மாலான உதவிகளை மனப்பூர்வமாகவும், பொருள் ரீதியாகவும் செய்து வருகிறோம்.
ஆயினும் சமீப காலமாக நம் கலைஞர்கள் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இலங்கை செல்வதை தனிப்பட்ட ஒரு சிலர் விமர்சிப்பதும் பத்திரிகை வாயிலாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுப்பதையும் தனிப்பட்ட முறையில் மிரட்டுவதையும் நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
எங்களது கலையுலகை சேர்ந்தவர்கள் தொழில் ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலோ இலங்கை செல்லலாமா, வேண்டாமா என்கிற முடிவை கலையுலகை சார்ந்த அனைத்து அமைப்புகள் கொண்ட கூட்டு கலந்தாய்வு குழுவே முடிவெடுக்கும். நடிகர் சங்க உறுப்பினர்கள் அதன் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவார்கள்.
- திரைப்படங்களில் பணிபுரியும் எங்கள் உறுப்பினர்கள் பெரும் தொழிலாளர்களை திரைப்படத்தின் வர்த்தகத்தில் ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு நடிகர்கள் பொறுப்பல்ல. திரைப்பட வர்த்தகத்தை சார்ந்தவர்கள் லாப நஷ்டங்களுக்கு எங்கள் உறுப்பினர்களை பொறுப்பாக்க முடியாது. அவர்களிடம் நஷ்டஈடு கேட்க முடியாது.
- திரைப்பட வர்த்தக சபை, தயாரிப்பாளர் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் நடிகர் சங்கம் போட்டுள்ள ஒப்பந்தத்தின்படி நடிகர் சங்கத்தில் உறுப்பினரான பிறகே தமிழ் திரைப் படங்களில் நடிக்க முடியும். உறுப்பினர்கள் ஆகாத நடிகர்கள் ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் உறுப்பிர்கள் ஆக வேண்டும். இல்லையெனில் உறுப்பினர் அல்லாத கலைஞர்களுடன் நமது உறுப்பினர்கள் பணி புரிய மாட்டார்கள்.
- இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு புனர் வாழ்வு பணிகள் தாமதமாக நடக்கிறது. அவதிப்படும் எங்கள் சகோதர, சகோதரியான இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க துரித நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
- நடிகர்கள், தொழிலாளர்களுக்காக நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வீடுகட்டிக் கொள்ள நிலம் ஒதுக்க கொள்கை அளவில் அரசாணை வழங்கிய முதல்வர் கருணாநிதிக்கு பொதுக்குழு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து கொள்கிறது
கொழும்புப் பட விழாவுக்கு எந்த தமிழ் நடிகர், நடிகையும் போகாமல் கடும் சிரத்தையுடன் பார்த்துக் கொண்ட நடிகர் சங்கம் தற்போது யார் போனாலும் அதைத் தடுக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தப்பினார் ஆசின்!
நடிகர் சங்கத்தின் இன்றைய தீர்மானத்தைப் பார்க்கும்போது இலங்கை போனதற்காக பல்வேறு தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நடிகை ஆசின் மீது எந்தவித தூசியோ, தும்போ படாத வகையில் அவர் பத்திரமாக பாதுகாக்கப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.
பரிதாபத்துக்குரிய பாலிவுட் கலைஞர்கள்!
கொழும்பு பட விழாவுக்குப் போகக் கூடாது என்று கடுமையாக நிர்ப்பந்திக்கப்பட்ட பாலிவுட் திரையுலகினர் தற்போதைய நடிகர் சங்க தீர்மானத்தின் மூலம் பெரும் கோமாளிகளாக்கப்பட்டுள்ளனர்.
அமிதாப் பச்சன் முதல் சிறிய நடிகர், நடிகர் வரை பலரும் இந்த விழாவுக்குப் போகாமல் புறக்கணித்தனர். தமிழ் உணர்வாளர்களின் போராட்டம் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், தமிழ் திரையுலகின் ஒட்டுமொத்த கோரிக்கைக்கு மதிப்பு கொடுத்துதான் அமிதாப் உள்ளிட்டோர் போகாமல் இருந்தனர்.
ஆனால் இப்போது நடிகர், நடிகையர் யாரும் இலங்கைக்குப் போவதை தடுக்கக் கூடாது என்று நடிகர் சங்கம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்ற தீர்மானத்தையோ, அறிவிப்பையோ, கொழும்புப் பட விழா பிரச்சினையின்போது ஏன் நடிகர் சங்கம் நிறைவேற்றவில்லை என்பது புரியவில்லை.
இலங்கைக்கு எதிராக இயக்குநரும், நாம் தமிழர் அமைப்பின் தலைவருமான சீமான் கடுமையாக போராட்டம் நடத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் சங்கத்தின் இந்த நடவடிக்கை கவனிப்புக்குரியதாகியுள்ளது. மேலும், நடிகர் கருணாஸ், நாம் தமிழர் அமைப்புக்கு எதிராக புகார் கூறியுள்ள நிலையில், தற்போதைய நடிகர் சங்க முடிவு, முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தெரிகிறது.
Comments
Post a Comment