‘மாஸ்கோவின் காவிரி’ காதல் மெய்ப்பட...காலம் வசப்பட...

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இலக்கிய ரசனை கொண்ட சினிமாக்காரர்களை விரல்விட்டு எண்ணினால், அதில் ஒரு விரலை ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுக்காக ஒதுக்கவேண்டி வரும். காட்சித்திறனில் கவிதை படைக்கும் ரவிவர்மன் இப்போது இயக்குநர். ஆர் பிலிம்ஸின் 'மாஸ்கோவின் காவிரி' அந்த வேலையைச் செய்திருக்கிறது. மனைவியின் பிரசவ நேரத்தில் வேலை விஷயமாக வெளியூரில் மாட்டிக்கொண்ட கணவனைப்போல, 'மாஸ்கோவின் காவிரி' வெளியாகும் தருணத்தில் அல்லுஅர்ஜுன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் தெலுங்கு 'பத்ரிநாத்'துக்காக குலு மணாலியில் ஒளிப்பதிவு வேலையில் இருந்தார் அவர். பரபரப்பிலும் 'கூலாக'ப் பேசியதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

''கல்வி, படிப்பினை, வசதி, மரியாதை, உயர்வுன்னு எல்லாமே இந்த சமுதாயம்தான் நமக்குக் கொடுக்குது. எனக்கும் ஒளிப்பதிவாளர்னு தகுதி, இதுக்குண்டான புகழ் எல்லாமே இந்த சமுதாயம் தந்ததுதான். 'அதுக்கு நாம என்ன திருப்பிச்செய்ய முடியும், அதுவும் நம்ம சினிமாவைக் கொண்டே..?'ன்னு யோசிச்சப்ப உருவானதுதான் இந்தக்கதை. இது ஒருபக்கம். இன்னொரு பக்கம் காலத்துக்கும் ஜெயிச்சிருக்க சினிமா எதைத் தாங்கி சொல்லப்பட்டிருக்குன்னு பல கிளைகளா யோசிச்சா, அது 'காதல்'ங்கிற மையப்புள்ளில வந்துதான் நின்னது.

அது 'அலைகள் ஓய்வதில்லை'யோ, 'அலை பாயுதே'வோ, 'டைட்டானி'க்கோ... காதல் எப்பவும் புதுசுதான். ஆதி உலகத்தில முதல் பரஸ்பர உணர்வு காதலா இருக்கலாம். காதலுக்கு அத்தனை வயசு இருந்தாலும், காதலிக்கிற ஒவ்வொருத்தருக்கும் அது புதுசாய்ப் பிறந்த உணர்வைத்தான் தருது.
அதனால இனிக்க இனிக்க ஒரு காதல் கதையை எடுத்துக்கிட்டு, போற போக்கில நாம இன்னைக்கு இழந்துகிட்டு வர்ற சமுதாய அவசியங்கள் என்னன்னு இந்தப் படத்தில சொல்லியிருக்கேன்...'' என்கிற ரவிவர்மன் தொடர்ந்து பேசினார்.

''மரங்களை இழக்கறோம், அதனால தண்ணியை இழக்கறோம். கலாசார மாறுதல் நம்ம அடையாளங்களை மாத்தி வைக்குது. விஞ்ஞானம் நாளுக்கு நாள் நம்ம செயல்களை மாறுதலுக்கு உள்ளாக்கிட்டே வருது. அஞ்சு வருஷத்துக்கு முன்னால அஞ்சாயிரம் ரூபா சம்பளம் கிடைச்சா நிம்மதியா இருக்கமுடிஞ்சது. இன்னைக்கு ஐம்பதாயிரம் பத்தலை. என்னவாகும் எதிர்காலம்? இப்படியான விஷயங்களை எல்லாம் ஒரு லவ் ஸ்டோரிக்குள்ள வச்சு மடிச்சு ஸ்வீட் பீடாவா கொடுத்திருக்கேன். அதனால இது எல்லாருக்கும் பிடிக்கும்...''
''படம் ஆரம்பிச்சு நாளாச்சு. ரிலீசுக்குத் தாமதம் 'காவிரி'ங்கிறதாலா..?'' என்ற கேள்விக்கும் புன்னகை மாறாமல், ''நேர்த்தியா படத்தைக் கொடுக்கணும்ங்கிறது ஒரு அவசியம். என் படத்துக்கு தீபாவளி, பொங்கல்னு எந்த அவசரமும் இல்லைங்கிறதும் ஒரு காரணம்...'' என்கிறார். அதேபோல் இயக்கத்தை மேற்கொண்ட பிற ஒளிப்பதிவாளர்களைப் போல தன் படத்துக்குப் பிற ஒளிப்பதிவாளர்களை நாடாமல், தானே கேமராவை இந்தப்படத்தில் கையாண்டிருக்கிறார் ரவிவர்மன்.

''எனக்கு எல்லா விஷயத்திலயும் பாலுமகேந்திராதான் முன்மாதிரி. அவரே எழுதுவார். அவரே படம்பிடிப்பார். அவரே இயக்குவார்..! இருந்தும் அவர் படங்களோட தரம் என்னைக்கும் நிரந்தரம் இல்லையா..? எல்லாமே உணர்வுகளோட சம்பந்தப்பட்டதுதான். அதனால என் சிந்தனைல என்ன எழுதினேனோ, அதை எடுக்கவும், என்ன வேணுமோ அதைப் படம்பிடிக்கவும் என்னைவிட வேற யார் சிறந்தவரா இருக்க முடியும்..? அப்படித்தான் இந்தப்படம் வந்திருக்கு. இருந்தாலும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய இயக்குநர் இதில எடுப்பா தெரிவார்...'' என்கிற ரவிவர்மன், இந்தப்படத்தில் புத்தம்புது கலைஞர்களை சினிமாவுக்குத் தந்திருக்கிறார்.

நாயகன் ராகுல் ரவீந்திரன், நாயகி சமந்தா, ஹர்ஷவர்தன், இசையமைப்பாளர் தமன் இந்த நால்வரையும் இதற்காகத் தேர்வு செய்தவர் ரவிவர்மன்தான் என்றாலும், இவர்களுள் சமந்தா 'விண்ணைத்தாண்டி வருவாயா' மூலம் தெலுங்கிலும், இப்போது 'பாணா' மூலம் தமிழிலும் குறிப்பிடத் தகுந்த நாயகியாகி விட்டார். இசையமைப்பாளர் தமனும் தமிழிலும், தெலுங்கிலும் தவிர்க்க முடியாத இடம்பிடித்துவிட்டார். ''அவங்களைப் போலவே ராகுல் ரவீந்திரனும், ஹர்ஷவர்தனும் பெருசா வருவாங்கன்னு எழுதி வச்சுக்கங்க. ஏன்னா, இந்த திறமைசாலிகளை அடையாளம் கண்டுபிடிக்க ரொம்பவே பிரயத்தனம் எடுத்துக்கிட்டேன். அது வீண்போகாது. அதேபோல நடிகை ரோகிணி, இயக்குநர்கள் ஷரவண சுப்பையா, கே.செல்வபாரதி, சீமான் இவங்க நாலுபேரும் என் நட்புக்காக நடிச்சிருக்காங்க. அவங்க வர்ற சீன்கள்ல, அவங்கதான் ஹீரோ, ஹீரோயின்..!'' என்கிறார் ரவிவர்மன் அழுத்தமாக.




Comments

Most Recent