நடிகர்கள் : அதர்வா, பிரசன்னா, சமந்தா, கருணாஸ், மவுனிகா ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன் இசை: யுவன் சங்கர் ராஜா இயக்கம்: பத்ரி வெங்கடேஷ் தயா...
நடிகர்கள் : அதர்வா, பிரசன்னா, சமந்தா, கருணாஸ், மவுனிகா
ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன்
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: பத்ரி வெங்கடேஷ்
தயாரிப்பாளர்: சத்யஜோதி மூவீஸ்
நல்ல கதைகளைப் பார்த்துப் பார்த்து படம் பண்ணும் சத்யஜோதி மூவீஸிடமிருந்து இந்த முறை பாணா காத்தாடி வந்துள்ளது.
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் (அதர்வா) ஒரு ப்ள்ஸ்டூ ஸ்டூடன்ட். படிப்பில் ஒவ்வொரு வகுப்பையும் பிடிவாதமாக இரண்டு ஆண்டுகள் படித்தாலும், காத்தாடி விடுவதில் கில்லாடி.
இடையில் அவருக்கும் ஃபேஷன் டிஸைனிங் ஸ்டூடன்ட் ப்ரியா (சமந்தா)வுக்கும் காத்தாடி மூலம் காதல் பூக்கிறது. ஆனால் அதே வேகத்தில் அந்த காதலில் விரிசல் விழுகிறது.
இருவரும் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள். இனி உன் முகத்திலேயே விழிக்கமாட்டேன் என்று இருவரும் விலகிப் போகிறார்கள். நண்பர்கள் எல்லாம் படாதபாடுபட்டு இருவரையும் ஒன்று சேர்க்கிறார்கள். ஆனால், விதி மீண்டும் அவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறது.
நல்ல கதைதான். ஆனால் சம்பந்தமே இல்லாமல் சில காட்சிகள். அதேபோல ஹீரோவின் நண்பனை பிரசன்னா எதற்காகக் கொல்கிறார் என்பதும் புரியவில்லை.
கல்லூரி மாணவர் வேடத்தில் புது சாதனையே செய்த முரளியின் மகன் அதர்வாதான் ஹீரோ. நல்ல களையான முகம். ஆனால், குரல்தான் மகா கரடு முரடாக உள்ளது. கொஞ்சம் முயற்சித்தால் இளம் ஹீரோக்கள் ரேசில் சுலபத்தில் இடம் பெற்றுவிடுவார்.
தெலுங்கில் ஏற்கெனவே ஹிட் நடிகையாகியுள்ள சமந்தா, தமிழில் தனி நாயகியாக நடித்துள்ள முதல் படம். குறைவில்லாத நடிப்பு. பாடல் காட்சிகளில் மனசை அள்ளுகிறார்.
பிரசன்னாதான் வில்லன். அறிமுகக் காட்சிகளில் உள்ள மிரட்டலும் அழுத்தமும், இறுதிக் காட்சிகளில் இல்லாமல் போவது மைனஸ்.
கருணாஸ் ரொம்ப நாள் கழித்து இயல்பாக சிரிக்க வைக்கிறார்.
ஒரே ஒரு காட்சியில் வருகிறார் முரளி. யார் நீங்க என்று அதர்வா கேட்பதற்கு அவர் கூறும் பதிலும், அதைத் தொடர்ந்து அதர்வா அடிக்கும் கமெண்டும் ரசிக்கும்படி உள்ளன.
அதர்வாவின் அம்மாவாக நடித்திருக்கும் மௌனிகா அழுத்தமான நடிப்பைத் தந்திருந்தாலும், சில காட்சிகளில் வழக்கம் போல மிகை!
ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு குப்பத்து சென்னையையும் அவர்களின் காத்தாடி சந்தோஷங்களையும் கண்முன் நிறுத்துகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில் கண் தாக்குதே… பாடல் தூக்கல். பின்னணி இசையும் ஓகே.
பத்ரி வெங்கடேஷுக்கு இது முதல் படம். வித்தியாசமான கதையுடன் களமிறங்கியவர், அதை இன்னும் அழுத்தமாகச் சொல்லத் தவறியதில், காத்தாடியின் இலக்கு திசைமாறிப் போய்விட்டது.
Comments
Post a Comment