பிரபுதேவா & நயன்தாராவுக்கு டிசம்பரில் கெட்டிமேளம்

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1624.jpg
நடிகர் பிரபுதேவா, நயன்தாரா திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ‘வில்லு’ படத்தை பிரபுதேவா இயக்கினார். இதில் ஹீரோயினாக நடித்த நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் நட்பு மலர்ந்தது. இருவரும் நெருங்கிப் பழகினர். வெளியூர் ஷுட்டிங் சென்றாலும் செல்போனில் மணிக்கணக்கில் பேசுவார்கள். இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு பரவியது. ‘எங்களுக்குள் அப்படி எதுவும் இல்லை’ என இருவரும் மறுத்து வந்தனர்.

ஒரு கட்டத்துக்கு பிறகு விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வந்தனர். விழாக்களுக்கும் ஒன்றாகவே வந்தனர். விளம்பர படங்களில் நடிக்காமல் இருந்த நயன்தாரா, சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிறுவனத்துக்காக பிரபுதேவா இயக்கவிருந்த விளம்பர படத்தில் முதன்முறையாக நடிக்க ஒப்புக்கொண்டார். சில காரணங்களால் அந்தப் படத்தை பிரபுதேவா இயக்கவில்லை. இதையறிந்ததும் நயன்தாராவும் ஒதுங்கிக்கொண்டார்.

தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நயன்தாரா, சமீபகாலமாக புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் மட்டும் நடித்து வந்தார். அதையும் முடித்துவிட்டார். கன்னடம், தெலுங்கு மொழிகளில் ஒப்புக்கொண்டிருந்த படங்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார். புதிய பட வாய்ப்பு எதையும் ஏற்கவில்லை. இதனால் பிரபுதேவாவும் நயன்தாராவும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி உள்ளது. டிசம்பரில் இருவரும் மாலை மாற்றிக் கொள்வார்கள் என கூறப்படுகிறது. இதுபற்றி நயன்தாரா மேனேஜரிடம் கேட்டபோது, ‘‘கைவசம் உள்ள படங்களை நயன்தாரா முடித்துக்கொடுத்துவிட்டார். புதிய படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. மற்றபடி வேறு எதுவும் தெரியாது’’ என்றார். பிரபுதேவா ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார்.

Comments

Most Recent