லைஞர் நகர் அடிக்கல் நாட்டு விழா-ரஜினி, ஜிதேந்திரா, மம்முட்டி பங்கேற்பு


Nadigar Sangam Meeting

சென்னை: பையனூரில் கட்டப்பட உள்ள கலைஞர் திரைப்பட நகருக்கான அடிக்கல் நாட்டு விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி நடக்கிறது.
இந்த விழாவில் முக்கிய விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினி, மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தமிழ் திரையுலக கூட்டுக்குழு கூட்டம், சென்னையிலுள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. பின்னர் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ் திரையுலகினருக்கு வீடுகள் கட்ட, சென்னை அருகிலுள்ள பையனூரில் 96 ஏக்கர் இடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு ‘கலைஞர் நகரம்’ என்று திரையுலகினர் பெயர் சூட்டியுள்ளனர். அங்கு வீடுகள் கட்ட, வரும் 22ம் தேதி காலை 10 மணியளவில் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.
கே.பாலசந்தர் தலைமை தாங்குகிறார். தாசரி நாராயணராவ், ஏ.வி.எம்.சரவணன் முன்னிலை வகிக்கின்றனர். நான் வரவேற்றுப் பேசுகிறேன். மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி, நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இயக்குனர்கள் சங்க தலைவர் பாரதிராஜா, சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர் விடுதலை, நடிகர் சங்க பொருளாளர் வாகை சந்திரசேகர், பிலிம் சேம்பர் தலைவர் கல்யாண் பங்கேற்கின்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், ஜித்தேந்திரா, மம்மூட்டி, வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசுகின்றனர்.
முதல்வர் தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டு விழா பேருரை ஆற்றுகிறார். பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் நன்றி கூறுகிறார். விழாவில் திரையுலகினர் கலந்துகொள்ள வசதியாக, 22ம் தேதி திரைத்துறை சம்பந்தமான எந்தவொரு வேலையும் மேற்கொள்வது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பையனூரில் 20 ஆயிரம் பேர் உட்காரும் வகையில், பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது. சென்னையில் இருந்து காலை 6 மணியளவில், 200 பஸ்கள், கார்களில் திரையுலகினர் பையனூர் செல்கின்றனர். கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
கலைஞர் நகரத்தில் 15 ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. 4 புளோர்கள் கொண்ட திரைப்பட ஸ்டுடியோவும் கட்டப்படுகிறது என்றார் ராம நாராயணன்.

Comments

Most Recent