எங்கே போகிறது கோலிவுட்?

http://thatstamil.oneindia.in/img/2010/08/09-deva-leelai200.jpg

தமிழ் சினிமா போகும் போக்கு நல்ல கதையையும், நல்ல சினிமாக்களையும் விரும்பும், நேசிக்கும் ரசிகர்களுக்கு பெரும் அருவறுப்பையும், கவலையையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

நாளிதழ்களில் வரும் கலர் கலர் சினிமா விளம்பரங்களைப் பார்ப்போருக்கு ஒரு வித்தியாசம் நன்றாகத் தெரியும். முக்கால்வாசி விளம்பரங்களில் ஆபாசமான, கவர்ச்சிகரமான போஸ்களுடன் கூடிய நடிகைகளைத்தான் பார்க்க முடிகிறது. அப்படி இல்லாவிட்டால் டபுள் மீனிங்குடன் கூடிய பன்ச் லைன்களுடன் கூடிய விளம்பரத்தைக் காணலாம்.

ஏன் இப்படி…?

கெட்டியான கதைகளைக் காட்டி ரசிகர்களை இழுத்தது அந்தக் காலம். ஆனால் இப்போதோ விதம் விதமான ‘குட்டிகளின் சதை’களைக் காட்டி கலர் கலராக விளம்பரம் கொடுத்து, ஒரு மாதிரியான பன்ச் லைன்களுடன் கூடிய விளம்பரங்களைக் கொடுத்து ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான, உண்மையிலேயே அருமையான படங்களும் வரத்தான் செய்கிறது. ஆனால் அவற்றை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் கால் விரல்களையும் சேர்த்து வைத்து எண்ணினாலும் போதாது என்று கூறும் அளவுக்கு காமத்தையும், செக்ஸையும், வன்முறையையும் வைத்து எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகி விட்டது.

இலக்கணப் பிழை என்று ஒரு படம். எவ்வளவு அழகான தமிழ் வார்த்தை என்று ரசித்தபடி அந்தப் படத்தின் ஸ்டில்லைப் பார்த்தால் படத்தின் நாயகியை படு கவர்ச்சிகரமாக போட்டு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு கோணத்தில் அந்த நடிகை படுத்தபடியும், சாய்ந்தபடியுமே காணப்படுகிறார்.

அதேபோல தேவலீலை என்ற படத்தின் விளம்பரமும் இப்படித்தான் கந்தரகோலமாக காமாந்திர சாயலுடன் உள்ளது. அந்தரங்கம் என்ற படத்துக்கும் இப்படித்தான் விளம்பரம் கொடுத்தனர்.

துரோகம் நடந்தது என்ன என்ற படத்துக்கான விளம்பரங்கள் படு கவர்ச்சிகரமாக, பட்டவர்த்தனமான காமச்சாயலுடன் வெளியானது-அதுவும் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில்.

தமிழ் சினிமாவில் தற்போது தயாரிப்பில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட படங்கள் இப்படித்தான் காமத்தையும், வன்முறையையும், கள்ளக்காதல்களையும் மையமாக கொண்டு உருவாக்கப்படுகின்றனவாம். கேட்டால் சினிமாவில் கவர்ச்சி தவிர்க்க முடியாதது என்கிறார்கள் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலர்.

கவர்ச்சி சரிதான், அதுவே ‘கவுச்சி’யாகி விட்டால் நாற்றம் தாங்க முடியாதே!?

Comments

Most Recent