P Vasu's 'Aptharakshaka' become a Superhit in Kannada

http://thatstamil.oneindia.in/img/2010/02/26-vimala-200.jpg

பி.வாசுவின் இயக்கத்தில் விஷ்ணுவர்தன் - சௌந்தர்யா நடித்து வெளியான 'ஆப்தமித்ரா' கன்னட திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதையும், அந்தப் படமே தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க 'சந்திரமுகி'யாக வெளியாகி பல சாதனைகளைச் செய்ததும் யாரும் மறக்க முடியாதது. சந்திரமுகியின் சாதனை தமிழ் சினிமா வரலாற்றையே புரட்டிப் போட்டுவிட்டது என்றால் மிகையல்ல.

இப்போது ஆப்தமித்ராவின் இரண்டாம் பாகத்தை 'ஆப்தரக்ஷகா' என்னும் பெயரில் பி வாசு அவர்கள் இயக்கி வெளியிட்டுள்ளார். இந்தப் படத்திலும் மறைந்த விஷ்ணுவர்தன்தான் நாயகன். கடந்த 19-ம் தேதி கர்நாடகாவில் வெளியான ஆப்தரக்ஷகா பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

இந்தப் படத்தில் விஷ்ணுவர்தன், சந்தியா, விமலா ராமன் உள்பட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விஷ்ணுவர்தன் நடித்த 200 வது படம், கடைசி படம் என்ற பெருமைக்குரியது ஆப்தரக்ஷகா.

கர்நாடகாவில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. வெளியான இரண்டே நாட்களில் ரூ 1.45 கோடியை வசூலாகக் குவித்துள்ளது ஆப்தரக்ஷகா.

ரசிகர்கள் மணிக்கணக்கில் வரிசையில் நின்று டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள். ஒரு டிக்கெட்டின் விலை ரூ 3000 வரை விற்கப்படுவதாகவும், அப்படியும் கூட ரசிகர்களுக்கு சுலபத்தில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் பெங்களூருவிலிருந்து வரும் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

'விஷ்ணுவர்தன் என்ற மாபெரும் கலைஞனின் பன்முகப் பரிமாணத்தைக் காட்டும் விதத்தில் இந்தப் படம் அமைந்துள்ளது. கன்னடத்தில் இதுவரை வந்த படங்களில் மிகச் சிறப்பான படம் ஆப்தரக்ஷகா. கண்டிப்பாக அனைத்து ரசிகர்களும் பார்க்க வேண்டும்', என்று பத்திரிகை விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் பி வாசு கூறுகையில்,

"ஆப்தரக்ஷகா-2" படத்துக்கு கன்னடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதனை தமிழில் இயக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கான முயற்சியில் இருக்கிறேன். படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினி அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

இப்போது ஆர்கே நாயகனாக நடிக்கும் 'புலிவேஷம்' படத்தை தமிழில் இயக்கி வருகிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு ஷெட்யூல் மட்டுமே முடிந்துள்ளது..." என்றார்.

Comments

Most Recent